ஒரு நடிகையாக நயன்தாராவை வெளியே அழைத்து வருவது சிரமம்: விக்னேஷ் சிவன் ஓபன் டாக்
அரசியல் தெரிந்தவர்களிடம் சீமான் அரசியல் பேசுவார், சினிமா தெரிந்தவர்களிடம் அவர் சினிமா பேசுவார் என நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறினார்.

Published : April 8, 2026 at 9:37 AM IST
சென்னை: ஒரு நடிகையாக நயன்தாராவை திரைப்பட புரமோஷன்களுக்கு அழைத்து வருவது சிரமம் என அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'எல்.ஐ.கே' (Love Insurance Kompany - LIK) திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற 'எல்.ஐ.கே' படத்தின் முன்னோட்ட நிகழ்வில் இயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் இயக்குநர் ராம் பேசுகையில், “கடந்த காலங்களில் உதவி இயக்குநராக விக்னேஷ் சிவனை நான் பார்த்திருக்கிறேன். இப்போது அவரின் உயரம் என்னை மகிழ்ச்சி அடைய செய்கிறது. அவருக்கு எதுவும் சாதாரணமாக அமையாது, அமைந்தால் சிறப்பாக அமையும். தமிழ் சினிமாவில் யாரும் முயற்சி செய்யாத கதையில் இந்த படத்தை முயற்சி செய்திருப்பது தான் விக்னேஷ் சிவனின் அடையாளம்” என பாராட்டினார்.
தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ”அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் நட்பு மிகவும் சிறந்தது. அந்த வகையில், இந்த படத்தில் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. விக்னேஷ் சிவனை பொருத்தமட்டில் மிகப்பெரிய உழைப்பாளி, அவருக்கு திரைத்துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களும் தெரியும். அனைவருக்கும் பிடித்த ஜாலியான திரைப்படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், “நான் உதவி இயக்குநராக இருந்த போது எஸ்.ஜே.சூர்யாவை நாயகனாக வைத்து படம் எடுப்பதற்காக அவரிடம் ஒரு கதையை கூறினேன். கதை சொன்ன மாத்திரத்திலேயே அவர் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லிவிட்டார். இப்போது இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சீமான் சாருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. அவர் தன்னுடன் பயணிக்கும் நபர்களை சிறந்த முறையில் பார்த்துக் கொள்வார். எனக்காக வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொண்டு வருவார். யாரிடம் எதைப் பேச வேண்டும் என்பதை தெரிந்தவர். அரசியல் தெரிந்தவரிடம் அரசியல் பேசுவார்; சினிமா தெரிந்தவரிடம் சினிமா பேசுவார்.
வழக்கமாக விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் ரசிகர்கள் எதையெல்லாம் ரசித்துப் பார்ப்பார்களோ, அவை அனைத்தும் இந்த படத்தில் நிச்சயம் இருக்கிறது. என்னுடைய ரசிகர்கள் என சொல்வதில் எனக்கு ஒரு கூச்ச சுபாவம் உள்ளது. ஏனெனில் இவனுக்கெல்லாம் ரசிகர்களா? என ஏளனம் செய்வார்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை எனக்குள் உண்டு.
இனிமேல் நான் எங்கு சென்றாலும், தைரியமாக என்னுடைய ரசிகர்கள் பெயரை நிச்சயமாக சொல்வேன்” என பிரதீப் ரங்கநாதன் பேசினார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நயன்தாரா என்று அறிவிப்பு வெளியாகி கொண்டிருந்தது. அந்த தருணத்தில் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தோம். அப்பொழுது எதிர்பாராத விதமாக பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது.
இதனால் நான் மனதில் நினைத்திருந்த திரைப்படத்தை எடுக்க முடியுமா இல்லையா என்கிற சந்தேகம் எழுந்தது அந்த தருணத்தில்தான் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்திற்காக தான் வாங்கிய பணத்தை நயன்தாரா கொடுத்தார். அதை வைத்துதான் இந்த பட தயாரிப்பு வேலை துவங்கியது.
நடிகையாக நயன்தாராவை படத்தின் முன்னோட்ட விழாவிற்கு அழைத்து வருவது எனக்கு சிரமமானது. அவர் எந்த பட நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார். இருந்த போதிலும். ஒரு மனைவியாக அவரை என்னால் அழைத்து வர முடியும்” என கூறினார். அப்போது மேடையில் நயன்தாரா திடீரென தோன்றினார்.

