ETV Bharat / entertainment

'சல்லியர்கள்' திரைப்படத்தை வெளியிட முதல்வர் உதவிட வேண்டும் - தவாக தலைவர் வேல்முருகன் கோரிக்கை

சல்லியர்கள் திரைப்படத்தின் மூலம் வரும் லாபம் தமிழ்நாட்டில் உள்ள 114 அகதிகள் முகாமில் இருக்கும் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளுக்கு நிதியாக வழங்கப்படும் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 1:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சல்லியர்கள் திரைப்படத்தின் திரையிடலை உறுதி செய்ய முதலமைச்சரும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சரும் ஆவணம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.

சல்லியர்கள் திரைப்படத்திற்கு திரையரங்கள் கிடைக்காததால், திரையரங்க உரிமையாளர்களை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் எம்எல்ஏ, ”கருணாஸ் தயாரிப்பில், விநியோக உரிமையாளர் சுரேஷ் காமாட்சி, கிட்டு இயக்கத்தில் ’சல்லியர்கள்’ என்ற திரைப்படம் வெளியிட திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிவிஆர் மற்றும் கார்பரேட் திரையரங்க உரிமையாளர்கள் இலங்கை தமிழர்கள் பற்றிய படம் என்பதால் திரையரங்குகள் தர மறுக்கின்றனர்.

இந்த படத்திற்கு திரையரங்குகள் தராமல் அலைக்கழித்து படக்குழுவினருக்கு பொருளாதார நஷ்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றனர். திரையிட மறுக்கும் திரையரங்குகள் இழுத்து மூடப்படும் என எச்சரிக்கை விடுக்கிறோம். வேண்டும் என்றே திட்டமிட்டு திரையரங்குகள் தர மறுக்கின்றனர்.

சல்லியர்கள் திரைப்படத்தின் திரையிடலை உறுதி செய்ய முதலமைச்சரும், சம்மந்தப்பட்ட அமைச்சரும் ஆவணம் செய்ய வேண்டும். பிவிஆர் நிறுவனம் கர்நாடகம் என்றால் கன்னட மொழி திரைப்படத்துக்கு முன்னுரிமை, ஆந்திரா என்றால் தெலுங்கு, கேரளா என்றால் மலையாளத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்கள் பற்றிய படம் எடுத்தால் இசைவு கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்காமல் இருக்கின்றனர். தமிழ்நாடு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனியாவது திரையரங்க உரிமையாளர்கள் திருந்த வேண்டும். சென்சார் குழு அனுமதி அளித்த திரைப்படத்தை வட நாட்டு பெரும் முதலாளிகள் திரையிட மறுக்கின்றனர். ஓடிடியில் நாளை வெளியாகும் இந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

சல்லியர்கள் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கருணாஸ் பேசுகையில், ”சல்லியர்கள் திரைப்படத்தை நானும், என் தம்பியும் இணைந்து தயாரித்துள்ளோம். படம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஒப்பற்ற தலைவர் பிரபாகரனை போற்றும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல மன வருத்தங்கள், மன உளைச்சல்கள், அவமானங்களை கடந்து இந்த படத்தை தயாரித்து திரையரங்குகளுக்கு கொண்டு வரும் பணிகள் நடந்துள்ளது.

இந்த படத்தை தமிழ்நாட்டு திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தான் சென்சார் அனுமதி வாங்க நான் போராடினேன். அடுத்த தலைமுறையினருக்கு இதை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் நோக்கம். இன்றைக்கு திரையரங்கில் இந்த படத்தை வெளியிட முடியாத நிலை உள்ளது. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்து நல்ல தீர்வை கொண்டு வர வேண்டும்.

இதையும் படிங்க: ஜனநாயகன் VS பராசக்தி - எத்தனை திரையரங்குகள்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து அடுத்த தலைமுறையினர் சல்லியர்கள் படத்தை பார்க்க வழிவகை செய்ய வேண்டும். இந்த படத்தில் வரும் லாபம் தமிழ்நாட்டில் உள்ள 114 அகதிகள் முகாமில் இருக்கும் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளுக்கு நிதியாக வழங்கப்படும். எனவே முதலமைச்சரும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சரும் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.