ETV Bharat / entertainment

குடும்ப பிரச்னையால் பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி

சில நிமிடங்களிலே நடிகை ராஜேஸ்வரி மயங்கி விழுந்தார்.‌ இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனே அவரை கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சைதாப்பேட்டை காவல் நிலையம் - கோப்புப்படம்
சைதாப்பேட்டை காவல் நிலையம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 12, 2025 at 7:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: குடும்ப பிரச்சினை காரணமாக சீரியல் நடிகை விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிராட்வே தாயப்பன் முதலி தெருவை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39). இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல்வேறு மெகா தொடரில் துணை நடிகையாக நடித்து வந்தார்.

நடிகை ராஜேஸ்வரி கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.‌ இவர் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஹேமந்த் குமார், என்ற மகனும், தரணி என்ற மகளும் உள்ளனர். மகன் ஹேமந்த் குமார் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்‌. மகள் தரணி பிராட்வே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி
சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், சதீஷுக்கும் நடிகை ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 7 ஆம் தேதி நடிகை ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சதீஷ் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மறுநாள் காலை நடிகை ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்து கொண்டு சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள தன்‌ தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நடிகை ராஜேஸ்வரி நேற்றிரவு தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரையை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் மாத்திரைகளை சாப்பிட்ட சில நிமிடங்களிலே நடிகை ராஜேஸ்வரி மயங்கி விழுந்தார்.‌ இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனே அவரை கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் நடிகைக்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ராஜேஸ்வரி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை போலீஸார் நடிகை ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல... வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060, இமெயில் மூலமாக help@snehaindia.org தொடர்பு கொள்ளலாம் அல்லது டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.