அமரன் முதல் நந்தன் வரை - தேசிய விருதுகள் பெற வாய்ப்புள்ள திரைப்படங்கள்
2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான மத்திய அரசின் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன

Published : July 3, 2026 at 2:50 PM IST
சென்னை: அமரன், மகாராஜா, மெய்யழகன் உள்ளிட்ட திரைப்படங்கள் தேசிய விருதுகள் பெற வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்திய திரை உலகில் சிறந்து விளங்கும் திரைக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் விருதுகள் வெல்ல அதிக வாய்ப்புள்ள படங்களாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
அமரன்
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘அமரன்’. இந்த திரைப்படமானது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வசூல் மற்றும் விமர்சனரீதியாக அமரன் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அதேபோல் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் விருப்ப பாடல்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
மெய்யழகன்
பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’மெய்யழகன்’. 2டி என்டர்டெயிண்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில், கோவிந்த் வசந்தா இசை அமைத்திருந்தார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை ஆழமாக பேசி இருக்கக் கூடிய மெய்யழகன் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மகாராஜா
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிங்கம்புலி, நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘மகாராஜா’. எதிர்பாராத திருப்புமுனை கொண்ட ஆக்ஷன் த்ரில்லராக உருவான மகாராஜா திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், பொன்வேல், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாழை’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு மாரி செல்வராஜ் இப்படத்தை உருவாக்கியிருந்தார். மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய படங்களில் வாழை அதிக வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘விடுதலை 2’. இளையராஜா இசையமைத்த ’விடுதலை 2’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஜமா
பாரி இளவழகன் இயக்கத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜமா’. இளையராஜா இசையமைத்த ஜமா திரைப்படம், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இப்படத்தில் குறிப்பாக நடிகர் சேத்தன் நடிப்பு பாராட்டை பெற்ற நிலையில், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில், உருவாகியிருந்த இந்தப் படத்தை கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
| இதையும் படிங்க: மறைந்த இயக்குநர் பாக்யராஜ் எங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான தருணம் - ’டார்க்’ திரைப்பட இயக்குநர் நெகழ்ச்சி |
ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமையை கருவாக கொண்டு இப்படம் உருவானது. இப்படத்தில் விக்ரம், மாளவிகா ஆகியோரின் தத்ரூபமான நடிப்பு பாராட்டை பெற்றது. படம் வெளியான சமயத்தில் ‘தங்கலான்’ திரைப்படம், வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை.
லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’லப்பர் பந்து’. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்படும் பிரச்சனை குடும்ப உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்ற ஐடியாவை மையமாக கொண்டு லப்பர் பந்து திரைப்படம் உருவாக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நந்தன்
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘நந்தன்’. கிராமத்து அரசியல் மற்றும் சாதிய அடக்குமுறையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் சசிகுமார் நடிப்பு பெருமளவில் வரவேற்பை பெற்றது.

