குடும்பப் படங்களுக்கு பெயர் போன திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்
பொங்கலோ பொங்கல், காலம் மாறிப் போச்சு, பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற குடும்பப் படங்களை வி.சேகர் இயக்கியுள்ளார்.

Published : November 14, 2025 at 6:59 PM IST
சென்னை: பிரபல இயக்குநர் வி.சேகர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
வி.சேகரின் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும் குடும்பப் பிரச்சனைகளை அலசும். குறிப்பாக நடுத்தர வர்க்கத்து பிரச்சனைகளை அவ்வளவு அழகாக, இயல்பாக தனது படங்களில் காட்டியிருப்பார். கூட்டுக் குடும்பங்களின் அழகை, முக்கியத்துவத்தை அழகாக எடுத்திருப்பார். பெண்களின் உரிமையை உயர்த்தி பேசி இருப்பார். அப்படிப்பட்ட மக்கள் இயக்குநர் வி.சேகர் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்தில் எஸ்.வெங்கடேசன் - பட்டம்மாள் தம்பதிக்கு 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பிறந்தவர் வி.சேகர். பியூசி படிப்பை திருவண்ணாமலையில் முடித்தவர், உறவினர் செ.கண்ணப்பன் உதவியால் ஏவி.எம்.ஸ்டுடியோவில் உதவியாளராக 19 வயதில் வேலைக்கு சேர்ந்தார்.
சிறு வயது முதல் வாசிப்பு பழக்கம் உள்ளவர் வி.சேகர். உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். தான் உணர்ந்த கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க சினிமாவை பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதன் காரணமாக பகுதி நேரமாக படத் தொகுப்பாளர் லெனினிடம் உதவியாளராக சேர்ந்தார். அப்போது தயாரிப்பு நிர்வாகி நாராயணனின் நட்பு கிடைக்க அவர் மூலமாக கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய 'கண்ண தொறக்கனும்சாமி" படத்தில் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர், பிறகு கே.பாக்யராஜின் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் கதை இலாகாவில் பணியாற்றினார்.
வி.சேகர் இயக்கிய திரைப்படங்கள்
பின்னர் 1990ஆம் ஆண்டு வி.சேகர் நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரது நடிப்பில் 'நீங்களும் ஹீரோதான்' என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 'நான் புடிச்ச மாப்பிள்ளை' படத்தை இயக்கினார். அப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக வசூல் சாதனை படைத்தது.
அதன் பிறகு 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்', 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'வரவு எட்டணா செலவு பத்தணா, 'காலம் மாறிப் போச்சு', 'பொங்கலோ பொங்கல்', 'விரலுக்கு ஏத்த வீக்கம்', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' போன்ற தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், மீனா நடிப்பில் 'ஹெந்தீர் தர்பார்' என்கிற படத்தையும் இயக்கினார்.
தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்த வி.சேகர், சரத்குமார் நடிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கிய 'ஏய்' படத்தையும் தயாரித்தார். சின்னத்திரையில் 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'வீட்டுக்கு வீடு' தொடர்களை எடுத்துள்ளார்.
தங்கர்பச்சான் இயக்கிய 'பள்ளிக்கூடம்' படத்தில் கல்வி அதிகாரியாக நடித்த வி.சேகர், தனது மகன் காரல் மார்க்ஸ் நடிப்பில் 'சரவண பொய்கை' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், உடலநலக்குறைவு காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.சேகர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.14) மாலை அவர் காலமானார். கோடம்பாக்கம் சாமியார் மடம் அருகே சுப்புராயன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

