'சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ' ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் கார் விபத்தில் உயிரிழப்பு
நடிகர் விஜய்யின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட வெற்றிப் படங்களை ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

Published : May 5, 2026 at 10:53 PM IST
பியாவர் (ராஜஸ்தான்) / சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜிதன் ரமேஷ், ஜீவா ஆகியோரின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
ராஜஸ்தான் மாநிலம், பியாவர் மாவட்டம், ராய்ப்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜுந்தா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை மதியம் நடந்த சாலை விபத்தில் ஆர்.பி.சௌத்ரி உயிரிழந்தார்.அவருடன் காரில் பயணித்த அவரது மருமகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் பயணித்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீது மோதியதில் அவர் இறந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும், ராய்ப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் புதன்கிழமை ஜெய்ப்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சௌத்ரியின் மரணச் செய்தி கிடைத்ததும், சிர்வி சமூகத்தின் பிரதிநிதியும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளருமான பூரா ராம் சிர்வி சம்பவ இடத்திற்கு விரைந்தார். சௌத்ரி தங்கள் சமூகத்தின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தார் என்றும், அவர் பாலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றும் சிர்வி உருக்கமாக கூறினார்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் சௌத்ரியின் மறைவுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட சௌத்ரி, திரையுலகில் நுழைவதற்கு முன்பு எஃகு ஏற்றுமதி மற்றும் நகை வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். தனது திரைப்பயணத்தை மலையாளத் திரையுலகில், 'சூப்பர்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தொடங்கினார். 1989-இல் அவர் தமிழ்த் திரையுலகில நுழைந்தார்.
பிசியான இயக்குநர்களை அறிமுகம் செய்தவர்
பிரபல இயக்குநர்கள் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், எஸ்.எழில், ராஜகுமாரன், சசி, பால சேகரன், பிருந்தா சாரதி, ரவி மரியா உட்பட 34 இயக்குநர்களை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தவர் செளத்ரி.
நடிகர் விஜயை வைத்து அவர் தயாரித்த ஷாஜகான், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட திரைப்படங்கள் விஜயின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைபடங்களாகும்.
கே .எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த நாட்டாமை, சூர்யவம்சம், லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த ஆனந்தம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களையும் செளத்ரி தயாரித்துள்ளார்.
99-வது படம்: சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் "மகுடம்". இந்த திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 வது திரைப்படம் ஆகும். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் காக்கிநாடாவில் நடைபெற்றது. அதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை படத்தின் தயாரிப்பாளர் RB சவுத்ரி அவர்கள் ராஜஸ்தானில் கார் விபத்தில் அகால மரணமடைந்த செய்தி கேள்விப்பட்டு படத்தின் கதாநாயகனும் இயக்குநருமான விஷால், செளத்ரிக்கு படக்குழுவுடன் இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், படப்பிடிப்பையும் இன்று ரத்து செய்தார்.
சிம்ஹாராசி, சமுத்திரம், சினேகமண்டே இடிரா, நுவ்வு வஸ்தாவனி, சீனு உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார். ஆர் பி சௌத்ரிக்கு ஷில்பா என்ற மனைவியும் ஜித்தன் ரமேஷ், ஜீவா என்கிற இரு மகன்கள் உள்ளனர்.
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
— Rajinikanth (@rajinikanth) May 5, 2026
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர்…
ரஜினி இரங்கல்: செளத்ரியின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலைசிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்' என்று தெரிவித்துள்ளார்.

