அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணிய சிவா விளக்கம்
15 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தினர் தங்கள் வீட்டு விழாக்கள் மற்றும் திரைப்பட ரிலீஸ் சமயங்களில் பயன்படுத்தி வரும் கொடியை, அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சுப்ரமணிய சிவா விளக்கம் அளித்தார்.

Published : July 9, 2026 at 10:36 AM IST
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவிய நிலையில், அது குறித்து தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் சுப்ரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமாக உருவாகியுள்ள 'அர்ஜுனன் பெயர் பத்து' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநரும், தனுஷ் ரசிகர் மன்றத் தலைவருமான சுப்பிரமணிய சிவா, "இந்தக் கொடி நேற்று, இன்று உருவானது அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றத்தினர் தங்கள் வீட்டுத் திருமணங்கள், காதுகுத்து விழாக்கள், மற்றும் திரைப்பட ரிலீஸ் சமயங்களில் தோரணமாக இதே கொடியை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், மற்றும் அமைப்பாளர்களைக் கூட்டி மன்றப் பொறுப்புகளைப் புதுப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெற்ற கூட்டத்தின் போது, சில தனுஷ் ரசிகர்கள் இந்தக் கொடியை காரில் மாட்டும் வகையில் (Car Flag) புதிய வடிவில் தயாரித்து எடுத்து வந்துள்ளனர். அதனை நிர்வாகிகளின் கார்களில் மாட்டிவிட்டதை, சிலர் "புதிய கொடி அறிமுகம்" என்றும், தனுஷின் அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் என்றும் தவறாக புரிந்து கொண்டனர்” என தெரிவித்தார்.
கொடியில் இருக்கும் நட்சத்திர சின்னம் குறித்த கேள்விக்கு, "சூரியனே ஒரு ஸ்டார் தான். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் வெளிச்சத்திற்கு வர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதன் அடையாளமே நட்சத்திரம். அமெரிக்கக் கொடியிலும் கூடத் தான் நட்சத்திரம் இருக்கிறது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்று சுப்பிரமணிய சிவா விளக்கமளித்தார்.
தொடர்ந்து நடிகர் யோகி பாபு பேசுகையில், "நான் 2016 ஆம் ஆண்டில் நயன்தாராவுடன் நடித்தேன். அதனால் எந்த நடிகை, யாருடன் ஜோடி என்ற என்ற கவலை எனக்கு இல்லை. நமக்கு எப்பவுமே கதைதான் முக்கியம். மேலும், தான் எந்தவொரு காட்சியில் வந்தாலும், மக்கள் தன் முகத்தில் முதலில் எதிர்பார்ப்பது காமெடியை தான். அந்த காமெடி தான் தனக்கு சோறு போட்டது என்பதால் வாழ்நாள் முழுவதும் அதைப் பெருமையோடு செய்வேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
300 படங்களை நெருங்கிவிட்டீர்கள், இன்னும் எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "நான் இதுவரை கமல் சாருடன் மட்டும் தான் நடிக்கவில்லை. கூடிய விரைவில் அவருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என நம்புகிறேன். வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமல்லாமல் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கும், சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிகக் கடினம் என்பதைத் தனது 24 வருட அனுபவத்தில் உணர்ந்தேன்” என தெரிவித்தார்.

