அமரனை விட ’பராசக்தி’ மிகப் பெரிய ஹிட் - ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன் பேட்டி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Published : January 10, 2026 at 2:21 PM IST
சென்னை: அமரனை விட பராசக்தி திரைப்படம் மிகப் பெரிய ஹிட் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
’பராசக்தி’ திரைப்படம் இன்று வெளியானது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா ஆகியோர் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தனர். அவர்களுடன் நடிகர் அஜித் மனைவியும், நடிகையுமான ஷாலினி, நடிகர் சூரி, நடிகர் துருவ் விக்ரம் ஆகியோரும் இந்த திரையரங்கில் படம் பார்த்தனர். இதே போல் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவி மோகன் சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், ”பராசக்தி திரைப்படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு இடமாக விசாரித்து வருகிறேன். முதலாவதாக மதுரையிலிருந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வந்தது. அதை உங்கள் முன் படித்துக் காட்டுகிறேன். அமரனை விட பராசக்தி படத்திற்கு நல்ல வரவேற்பு வந்துள்ளது என தெரிவித்துள்ளனர்” என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்த படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. உணர்வுரீதியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் என நம்புகிறேன். நாங்களும் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்கள் கைதட்டல் வழங்குவார்கள் என நம்பிக்கையுடன் நடித்து வந்தோம்“ என்றார்.
சென்சாரில் திரைப்படத்திற்கு 25 கட் வழங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, நடிகர் சிவகார்த்திகேயன், “தணிக்கை குழுவிற்கு பல்வேறு விதமான நிபந்தனைகள் இருக்கிறது. இது தொடர்பான விவாதிப்பதற்கான நேரம் இதுவல்ல. நான் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்ப்பதற்காக வந்திருக்கிறேன், பார்த்து விட்டு உங்களுடன் பேசுகிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஈடிவி செய்தியாளரிடம் பராசக்தி திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா, “முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் ரசிகர்களுடன் இந்த திரைப்படத்தை இணைந்து பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’பராசக்தி’. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரெய்லர் வெளியானது முதல் படத்தின் வசனங்கள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக நேற்று பராசக்தி திரைப்படத்திற்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

