அஜித்தின் 64வது படம் 'டேர் டெவில்'- படத்தை தயாரிக்கிறார் ஷாலினி அஜித்குமார்!
"டேர் டெவில்" படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Published : August 3, 2026 at 8:19 PM IST
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிக்கும் 64வது படத்திற்கு 'டேர் டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் விஜய் - அஜித் படங்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி இருக்கும். ஒவ்வொரு பண்டிகையின்போதும் இருவரின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும். தற்போது, நடிகர் விஜய் அரசியலில் களம் கண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். அவர் நடித்த 'ஜனநாயகன்' படம் பல்வேறு தடைகளையும் தாண்டி அண்மையில் வெளிவந்தது.
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் 'குட் பேட் அக்லி' திரைப்படம், கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் குமாரும் பரபரப்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக துபாய், ஐரோப்பிய மற்றும் ஆசிய அளவிலான கார் பந்தய போட்டிகளில் வென்று சாதனை படைத்தார்.

இது ஒருபுறம் என்றாலும் மறுபுறம் அஜித் குமாரின் அடுத்த திரைப்படம் குறித்தான அப்டேட் எப்போது வரும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 64வது திரைப்படத்தை அஜித் குமாரே தயாரிக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அது உண்மையில்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும்போது வெளிப்படையாக "ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவரும்" என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.
#DareDevil - #AjithKumar #ShaliniAjithkumar #BraveHeartsProduction @Adhikravi @anirudhofficial @SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK#AK64 pic.twitter.com/ccUoL0Zltg
— Suresh Chandra (@SureshChandraa) August 3, 2026
அந்த வகையில் இன்று மாலை சரியாக 5.42 மணிக்கு அஜித்குமாரின் மேலாளர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அஜித் குமாரின் 64வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், படத்திற்கு 'டேர் டெவில்' என பெயரிடப்பட்டிருப்பதாகவும், அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்திருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
'குட் பேட் அக்லி' போல 'டேர் டெவில்' என படத்திற்கு ஆங்கிலத்தில் பெயரிட்டிருப்பதால், இந்த திரைப்படம், வில்லத்தனம் கலந்த ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஷாலினி அஜித் குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு 'பிரேவ் ஹார்ட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

