ETV Bharat / entertainment

தமிழர்களுக்கு தனி ஓடிடி தளத்தை துவங்கும் சீமான் - 'சல்லியர்கள்' பட இயக்குநர் கிட்டு தகவல்

தமிழர்கள் பட்ட துயரத்தை, வலிகளை மட்டுமே திரைப்படங்களாக இயக்குவேன். ஒருபோதும் வணிகத்திற்கான படங்களை எடுக்கமாட்டேன் என்று இயக்குநர் கிட்டு கூறியுள்ளார்

'சல்லியர்கள்' பட இயக்குநர் கிட்டு
'சல்லியர்கள்' பட இயக்குநர் கிட்டு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 11, 2026 at 10:35 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழர்களுக்கு என பிரத்யேக ஓடிடி தளத்தை சீமான் தொடங்கவுள்ளதாக சல்லியர்கள் பட இயக்குநர் கிட்டு தெரிவித்துள்ளார்.

மக்கள் திரைப்படக் கழகத்தின் சார்பில் அண்மையில் ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' திரைப்படத்தின் திறனாய்வு மற்றும் அதன் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தமிழர் தேசிய நடுவம் மற்றும் அறிவுச்சமூகம் அமைப்பின் தலைவர் தமிழ் முதல்வன் தலைமை தாங்கினார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறியாளர் அருண் ஜெயசீலன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் கதிர்நிலவன், தமிழர் தேசியக் கழகத்தின் தலைவர் வையவன், மள்ளர் பேராயத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் 'சல்லியர்கள்' படத்தை திறனாய்வு செய்தனர்.

பின்னர் சல்லியர்கள் படத்தின் இயக்குநர் தி.கிட்டு, வெளியீட்டாளர் சுரேஷ் காமாட்சி, இணை தயாரிப்பாளர் ராவணன் குமார், நடிகை சத்யாதேவி, நடிகர் மகேந்திரன் ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் கிட்டு, ”வரலாற்றில் தமிழர்கள் பட்ட துயரத்தை, வலிகளை மட்டுமே திரைப்படங்களாக இயக்குவேன். ஒருபோதும் வணிகத்திற்கான படங்களை எடுக்கமாட்டேன் என்று தமிழ்நாட்டு மக்களிடம் நான் அளித்த உறுதிமொழியை சல்லியர்கள் வரை கடைப்பிடித்து வருகிறேன். அதில் மிக உறுதியாக உள்ளேன்.

பல்வேறு வேதனைகளோடும், வலிகளோடும் நாங்கள் உருவாக்குகின்ற திரைப்படங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் பெரும் தடைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறோம். விநியோகஸ்தர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் கருணாஸ், இணை தயாரிப்பாளர் ராவணன் குமார் என பலரும் 'சல்லியர்கள்' படத்தை வெளியிட முடியாமல் தவித்த தவிப்பு மிகக் கொடுமையானது.

'சல்லியர்கள்' பட இயக்குநர் கிட்டு (ETV Bharat Tamil Nadu)

வரலாற்றில் தமிழர்கள் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்களையே திரைப்படமாகக் கொண்டு வருகிறேன். என்னுடைய அடுத்த படமான 'ஆட்டி' கூட தஞ்சாவூர் பகுதியில் 1800களில் மராட்டிய மன்னர்களால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லும் கதை. ஒவ்வொரு இடத்திலும், காலகட்டத்திலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் நம்மால் மேற்கொள்ளப்படும் எந்தவித முன்னெடுப்பையும் மக்களிடம் கொண்டு செல்வது சவாலாக உள்ளது.

மதுரை எனது சொந்த மண். ஆகையால் இந்த அறிவிப்பை இந்த மண்ணிலேயே நான் செய்ய வேண்டும் என்பது தான் எனது ஆசை. இறுதி வரை எனது பயணம் தூய தமிழ் தேசிய படைப்பாளியாகவே இருக்க வேண்டும். அந்த வகையில், என்னுடைய மற்றொரு புதிய பயணமாக, 'அகராதி படைப்பகம்' என்ற பெயரில் புதிய புரொடக்ஷன் நிறுவனத்தை இங்கே அறிவிக்கிறேன். இனி யாரிடமும் போய் படத் தயாரிப்பிற்காக நிற்கப் போவதில்லை.

இதையும் படிங்க: தமிழ்நாடு கபடி அணியை தயார்படுத்தும் இந்திய ராணுவம் - தீவிர பயிற்சியில் வீரர்கள்

வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழர்களுக்கு என தனியான ஓடிடி தளம் ஒன்றை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்குகிறார். தமிழர்களின் வலிகளை, உன்னதத்தைப் பதிவு செய்யும் திரைப்படங்கள் 'அகராதி படைப்பகம்' மூலமாகத் தயாரிக்கப்பட்டு, தமிழர்களுக்கென்று உருவாக உள்ள ஓடிடி தளம் மூலம் இனி வெளியாகும். இதனை மதுரை மண்ணில் அறிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்” என்றார்.