ETV Bharat / entertainment

TN 2026 படத்துக்கு சிக்கல்: தேர்தல் முடியும் வரை வெளியிட தடை கோரி வழக்கு

TN 2026 திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால், அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நியாயமான தேர்தலை பாதிக்கும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 7, 2026 at 10:45 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை ‘TN 2026’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நட்டி நட்ராஜ் நடிப்பிலும், உமாபதி ராமையா இயக்கத்திலும் உருவாகியுள்ள TN 2026 திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. மேலும், இப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, ‘TN 2026’ திரைப்படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், அதன் தலைவரும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ‘TN 2026’ படத்தை வெளியிட அனுமதித்தால், அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நியாயமான தேர்தலை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை படம் வெளியிடப்படுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 6-ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது.

ஆனால், தனது கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என்பதால், தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளதாக எம்.எல்.ரவி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’டிஎன் 2026’ திரைப்படத்தில் விஜய் கெட்டப்? நட்டி நட்ராஜ் விளக்கம்

முன்னதாக, ஜனநாயகன் ரிலீஸ் ஆகக் கூடாது என்றால், எங்கள் தலைவரை அசிங்கப்படுத்தும் TN 2026 திரைப்படம் மட்டும் எப்படி ரிலீஸ் ஆகும்? என த.வெ.க தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்த இத்திரைப்படத்தின் கதாநாயகன் நட்டி நட்ராஜ், “‎நாங்கள் யாரையும் அவமதிக்கவில்லை. இப்படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன. விஜய் ஒரு சிங்கம். அவரை எப்படி அவமதிக்க முடியும். தம்பி ராமையா சொன்னதையே ஆதவ் அர்ஜுனாவுக்கு சொல்கிறேன். த.வெ.க தம்பிகளுக்கு வாழ்த்துகள். இந்த படத்தை படம் பார்த்த பின்னர் புரியும்” என்று தெரிவித்திருந்தார்.