Thalaivar 173: ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார்? இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கிறார் கமல்
தலைவர் 173 படத்தை டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் என்றும், டான் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் எனவும் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

Published : January 3, 2026 at 9:37 AM IST
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிக்க போகும் கமல்ஹாசன், இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 'தலைவர் 173' படம் குறித்த பேச்சுகள் அடிபட்டன.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டது. ஆனால், திடீர் திருப்பமாக அந்த படத்தில் இருந்து தான் விலகிவிட்டதாக சுந்தர். சி தெரிவித்தார். இது ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் பேசுபொருளாக மாறியது.
சுந்தர். சி கூறிய கதை, ரஜினிக்கு பிடிக்கவில்லை என ஒருபுறம் தகவல் வெளியானது. இதுபற்றி நடிகர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "என்னுடைய நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு கதை பிடிக்கவில்லை; அவருக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்போம்" என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ரஜினிகாந்த். இருந்தபோதிலும், ரஜினியின் 173-வது படம் பற்றி கேள்வி, இந்திய திரையுலகை சுற்றி சுற்றி வந்தது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் பல வதந்திகளும் காட்டுத் தீயாக பரவி வந்தன.
இந்நிலையில், இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், "ஜனவரி 3-ம் தேதி (இன்று) காலை 11 மணியளவில் ரஜினியின் 173வது திரைப்படம் குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியாகும்" கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனால் காலை 11 மணிக்காக நேற்றில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத் சினிமா ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் 173 படத்தை இயக்கப் போகும் அந்த இயக்குநர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைக்குமா என்ற ஆர்வமும் சினிமா ரசிகர்களிடம் எகிறி வருகிறது.
இதனிடையே, இந்த படத்தை 'டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும், டிராகன் பட இயக்குநரான அஸ்வத் மாரிமுத்துதான் இயக்குவார் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ காலை 11 மணிக்கு சஸ்பென்ஸ் உடைந்து விடும்.

