‘வேலுநாச்சியாரின் வழியில் அன்பு அக்கா’ - மதுரையை கலக்கும் திரிஷா போஸ்டர்கள்
‘தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில்’ என்று வாசகத்துடன் வேலுநாச்சியாரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட இலச்சினையும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

Published : August 3, 2026 at 2:56 PM IST
மதுரை: ‘அன்பு அக்கா திரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்’ என திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள், இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் திரிஷா. சமீப காலமாகவே இவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
இதனை உறுதிசெய்யும் விதமாக, தற்போது மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரையில் முதன்முறையாக திரிஷா பெயரில் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த மன்றத்தின் சார்பாக, மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மூலம் திரிஷாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையை கலக்கும் ‘திரிஷா’ போஸ்டர்#actortrisha | #madurai | #trishasangam | #trishaposter | #EtvBharatTamilNadu pic.twitter.com/mIfpdeNVxg
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) August 3, 2026
அந்த போஸ்டர்களில், ‘எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை. என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசீர்வாதத்தால்... தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்கு தமிழக அரசாங்காத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ‘தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில்’ என்று வாசகத்துடன் வேலுநாச்சியாரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட இலச்சினையும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
திரிஷாவின் அரசியல் பின்புலம்
திரிஷாவுடன் பல படங்களில் நடித்தவரும், அவருடைய நண்பருமான விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக அவ்வபோது செய்திகள் உலா வருகின்றன.
குறிப்பாக, தேர்தல் முடிவு நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த கையோடு, நேராக நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு சென்று முதல் ஆளாக வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.
| இதையும் படிங்க: காவிரி நீர் திறப்பு - ‘முதல்வர் விஜய் சாதனை’ என கர்நாடக வாகனங்களுக்கு மாலை அணிவித்து த.வெ.க-வினர் கொண்டாட்டம் |
இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் மிகவும் பேசுபொருளானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த திரிஷா, குழுமியிருந்தவர்களை பார்த்து கையசைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதோடு, முதலமைச்சர் விஜய்யின் அப்பா, அம்மாவை ஆரத்தழுவி அன்பை பகிர்ந்து கொண்டவர், அவர்கள் இருந்த முதல் வரிசையிலே அமர்ந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்பதை கண்டு ரசித்தார்
இதனால், அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார் என்ற பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அதற்கேற்றாற்போல், அவரும் சமீப காலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒட்டப்பட்டுள்ள ‘திரிஷா போஸ்டர்’ இணையவாசிகள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

