தனுஷ் உறவினர் பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் 'லவ் ஓ லவ்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு
'லவ் ஓ லவ்' திரைப்படத்தில் நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Published : July 4, 2026 at 2:33 PM IST
சென்னை: தனுஷ் உறவினர் பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடித்துள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படம் ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மகேஷ் நாராயண் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள 'லவ் ஓ லவ்' (Love oh Love) திரைப்படத்தில் கதாநாயகனாக பவிஷ் நாராயண் நடித்துள்ள நிலையில், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, அஷ்வத், சௌந்தர்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரபல நடிகர் தனுஷ் சகோதரி மகனான பவிஷ் நாராயண், அவர் இயக்கிய ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் வெளியான போது பவிஷ் நாராயன் நடிப்பை தனுஷ் வெகுவாக பாராட்டினார். தொடர்ந்து தற்போது இரண்டாவதாக 'லவ் ஓ லவ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தினேஷ் ராஜ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் ஆகியோர் சினிமா மீடியா மற்றும் எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் சார்பில் தயாரித்துள்ளனர்.
இப்படத்திற்கு பாக்ஸ்ன் (Foxn) இசையமைக்க, பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான 'லவ் ஓ லவ்' திரைப்படத்தின் டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. புதுமையான காதல் கதைக்களம், கலகலப்பான நகைச்சுவை, மற்றும் வண்ணமயமான காட்சியமைப்புடன் வெளியான டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது.

அதுமட்டுமின்றி 'லவ் ஓ லவ்' படத்தின் பாடல்களும் வெளியான பின்னர் ரசிகர்களின் விருப்பப் பாடல்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக துள்ளலான 'ப்ரோக் பாய்' (Broke Boy) பாடல் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
விழாவில் திரையிடப்பட்ட பாடல்களும் டிரெய்லரும், படத்தின் காட்சி வடிவமைப்பும் பெரும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், தணிக்கை குழுவின் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படம், வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

