தமிழ்நாடு முழுவதும் வெளியானது 'பராசக்தி' - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்
பராசக்தி திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி குடும்பத்துடன் வந்தார். அப்போது ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

Published : January 10, 2026 at 10:55 AM IST
சென்னை: சிவகார்த்தியேகன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியானது. காலை முதலே திரையரங்குகள் முன் திரண்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை வரை சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால், ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால், நேற்று நண்பகல் இந்த திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தது. இதனையடுத்து திரையரங்குகளில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக சுதா கொங்கரா விளங்குகிறார். தமிழ்நாட்டில் 60-களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பராசக்தி திரைப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். மேலும் இந்த படம் சிவகார்த்திகேயனின் 25-வது படமாகவும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100-வது படமாகவும் அமைந்துள்ளது.
'பராசக்தி' திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கு முன்பாகவும் இன்று காலை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் திரண்டனர். மேலும் அவர்கள் மேளதளங்களுடன் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திரையங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் கட்அவுட் மற்றும் பராசக்தி திரைப்பட பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதையும் படிங்க: 'பராசக்தி'யில் 25 இடங்களில் 'கட்' கொடுத்த சென்சார் போர்டு; 'தீ பரவட்டும்' வசனம் மாற்றம்!
மேலும், இந்த திரையரங்கிற்கு, பராசக்தி திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி குடும்பத்துடன் வந்தார். அப்போது ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அதில் நடித்த நடிகரர்கள், அவர்களின் குடும்பத்தினர் திரைப்படம் பார்க்க இந்த திரையரங்கம் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

