ETV Bharat / entertainment

‎எஸ்.ஜே.சூர்யாவின் ’கில்லர்’ படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து - சண்டை கலைஞர் உயிரிழப்பு

படப்பிடிப்பு தளங்களில் பணிபுரியும் கலைஞர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் நிலையில், அவர்களது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

’கில்லர்’ படப்பிடிப்பில் தளத்தில் விபத்து
’கில்லர்’ படப்பிடிப்பில் தளத்தில் விபத்து (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 1:28 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் ’கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சண்டை கலைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகில் துவக்கத்தில் இயக்குநராக அறிமுகமாகி விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ’கில்லர்’ (Killer) என்ற திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

‎இதனிடையே ’கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்றான வெடி குண்டு வெடிக்கும் காட்சியை குழுவினர் படமாக்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணி அளவில் யாரும் எதிர்பாராத நிலையில், சிலிண்டர் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.

‎இதில் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி வந்த மதன் என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதன் சண்டைக் கலைஞராக பணியாற்றி வந்தார் என கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த இருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த ‎விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து கியாஸ் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்து திரைப்படத் துறையினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த மதனின் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல நடிகை தீபாவின் தந்தை மீது கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது

கடந்த மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அதே போல கடந்த ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’வேட்டுவம்’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது மோகன்ராஜ் என்ற சண்டைக் கலைஞர் உயிரிழந்தார். படப்பிடிப்பு தளங்களில் பணிபுரியும் கலைஞர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் நிலையில், அவர்களது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பது தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.