பெரிய நடிகர்கள், மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் என்னிடம் இல்லை... 'மொத ராத்திரி' பட இயக்குநர் ஓபன் டாக்
சின்ன வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தற்போது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி என நடிகை அனிஷ்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Published : August 30, 2026 at 4:14 PM IST
தூத்துக்குடி: பெரிய நடிகர்கள், மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் என்னிடம் இல்லை என 'மொத ராத்திரி' பட இயக்குநர் ராஜா கருப்பசாமி ஓபனாக கூறியுள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'மொத ராத்திரி'. இந்த படக்குழுவினர் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கம் மற்றும் பெரிசன் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.
அப்போது படத்தின் கதாநாயகன் ரிஷிகாந்த், கதாநாயகி அனிஷ்மா அனில் குமார் மற்றும் இயக்குநர் ராஜா கருப்பசாமி உள்ளிட்ட பட குழுவினர், ரசிகர்களிடம் படம் குறித்து கருத்துகளை கேட்டு மகிழ்ந்தனர்.
ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது மகிழ்ச்சி
தொடர்ந்து செய்தியாளர்களிடம பேசிய படத்தின் கதநாயகன் ரிஷிகாந்த் கூறுகையில், "மக்களிடம் வரவேற்பு அமோகமாக உள்ளது. சென்னையில் இருந்து ஒவ்வொரு திரையரங்கமாக எங்களுடைய குழுவினர், ரசிகர்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றோம்.
ஒவ்வொரு தியேட்டருக்கு போகும்போதும் அவ்வளவு கூட்டம், ஹவுஸ்புல் காட்சிகளாகவும் இருக்கும். சில சமயங்களில் 10, 20 சீட் தான் திரையரங்கில் மிச்சமாக இருக்கும். மக்களுடைய ஆதரவால்தான் இந்த கூட்டம். அதனால்தான் ஒவ்வொரு தியேட்டராக நேரடியாக சென்று அவர்களுடைய கருத்தை கேட்டு வருகிறோம்.

இதனால் தான் மொத ராத்திரி வெற்றி படமாக அமைந்துள்ளது. நன்றி சொல்வதற்காக ஒவ்வொரு தியேட்டராக வருகை புரிகிறோம். குடும்பம், குடும்பமாக வருகை தந்து, கலகலன்னு சிரித்து பார்க்கின்ற படமாக உள்ளது.
இந்த படமே, ஃபேமிலி பங்ஷனுக்கோ, திருமணத்துக்கோ, திருவிழாவிற்கு போனால் எப்படி இருக்கும் என்பதை வைத்துதான் எடுத்தோம். அதே மாதிரி தியேட்டரில் பார்வையாளர்கள், அனைவரும் கைதட்டி ரெஸ்பான்ஸ் கொடுத்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
| இதையும் படிங்க: "அரசு உதவி செய்யாததால் சினிமாவில் இருந்து விலகுகிறேன்" - ’ஒன் மேன்’ பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் வேதனை |
அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் உடன், டோரதி என்ற படம் விரைவில் வெளியாகிறது. அவரது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்" என்று நடிகர் ரிஷிகாந்த் கூறியுள்ளார்.
நடிகை அனீஸ்மா அனில் குமார் கூறும்போது, "நல்ல ஸ்கிரிப்ட் வருது, நல்ல கதைகள் பண்ண முடியுது, அதற்காக இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். படங்கள் ஹிட் ஆகும்போது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. சின்ன வயதில் நடிக்க வேண்டும், நடிகை ஆக வேண்டும் என்று கனவாக இருந்தது. அது நடப்பது சந்தோஷமாக உள்ளது" என அனிஷ்மா அனில் குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறும்போது, "இதுபோன்ற டைட்டிலே வித்தியாசமாகத்தான் இருக்கும். 'மொத ராத்திரி' டைட்டில் என்பது 'அந்த' மாதிரியான படம் என நினைக்கக்கூடாது, இது முழுக்க முழுக்க குடும்பமாக பார்க்க வேண்டிய படம். சினிமாவில் வழக்கமாக, ஆளை தூக்கணும், தூத்துக்குடி, திருநெல்வேலிகாரனை கூட்டிட்டு வாங்க, என்பது போல காட்டியிருப்பார்கள்.
ஆனால் நான் இங்கு நிறைய காதல், காமெடி குடும்பத்தை பார்த்திருக்கிறேன். அது என்னுடைய படங்களில் இனிவரும். இதுபோன்ற கதைகள் தான் என்னிடம் உள்ளது. பெரிய நடிகர்கள், மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் இல்லை. எங்களைப் போன்ற இளம் இயக்குனர்களிடம் திரைப்படத்திற்கு கதை தான் முக்கியம் என்ற எண்ணம் உள்ளது.
சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று எண்ணத்தில் சென்னைக்கு சென்று பத்து வருடங்கள் ஆகிவிட்டது வேறு படங்கள் எதுவும் பார்க்கவில்லை. என்னுடைய சொந்த ஊரில் என்னுடைய படம் ஹவுஸ் ஃபுல்லாக போவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முழுவதும் இந்த திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. ஒரு முறை பார்ததவர்கள் மறுமுறை பார்க்க வருகிறார்கள். இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சிம்பு, சூரி உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

