இளையராஜாவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடல் விவகாரம்: ஜி.வி.பிரகாஷ் படத்தில் பயன்படுத்த தடை
இளையராஜாவின் பாடலை தங்களுடைய படத்தில் பயன்படுத்தியது குறித்து பதிலளிக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

Published : July 6, 2026 at 1:50 PM IST
சென்னை: இசையமைப்பளர் இளையராஜா இசையில் உருவான ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற பாடலை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் படத்தில் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முரட்டுக்காளை’. இந்த திரைப்படத்தில் இசையமைப்பளர் இளையராஜாவின் இசையில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற பாடல் இடம் பெற்று ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 2026 மார்ச் 27-ல் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில், நடிகை ஶ்ரீகெளரி பிரியா, அப்பாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில், இளையராஜாவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனது அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த பாடலை ஜி.வி பிரகாஷ் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், பதிப்புரிமை சட்டத்தின் படி தனது அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்த கூடாது என்ற நிலையில், பாடலை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கே. குமரேஷ் பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், தனது அனுமதி இல்லாமல் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, உருமாற்றத்தோடு பாடல் வெளியானதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை தொடர்ந்து பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இதற்கு பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
| இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர்களுக்கு எதிரான திமுகவின் அவசர மனு - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை |
ஏற்கனவே, இளையராஜா இசையமைத்திருந்த அன்னக்கிளி, கவிக்குயில் உள்பட 134 திரைப்படங்களின் இசை மற்றும் பாடல்களுக்கு உரிமை கோருவதற்கு அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களின் பாடல்கள் உரிமையானது சரிகம நிறுவனத்திடம் உள்ளதால், அந்த பாடல்கள் அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவ்ன் உள்ளிட்ட தளங்களில் இருக்கின்றன.
இந்த பாடல்களுக்கான உரிமை கோரி, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தாக்கல் செய்த மனுவானது கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

