ETV Bharat / entertainment

சிக்கலில் 'ஜனநாயகன்' ரிலீஸ் - ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்

ஜனநாயகன் பட போஸ்டர்
ஜனநாயகன் பட போஸ்டர் (@KvnProductions)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 4:42 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கலை சந்தித்துள்ளது. நாளை மறுநாள் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று தான் தீர்ப்பு வழங்கவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிப்பு வெளியான போதே, ஜனநாயகன் திரைப்படம் மீது அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்தனர். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள நிலையில், விவேக் பாடல்களை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தில் போஸ்டர் வெளியானது முதல் கடைசியாக நடைபெற்ற படத்தின் பிரமாண்ட இசை விழா, டிரெய்லர் வரை அனைத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ’ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து விளம்பரப்படுத்தியது. இதனையடுத்து திரையரங்குகளில் விஜய்யை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வந்தனர்.

இதனிடையே கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி ’ஜனநாயகன்’ திரைப்படத்தை தணிக்கை செய்ய படக்குழு விண்ணப்பித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 22 ஆம் ஒரு சில காட்சிகளை நீக்குமாறும், படத்திற்கு UA சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை குழு வாய் மொழியாக தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதன் பின்னர் கடந்த 24 ஆம் தேதி தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய புதிய கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். இந்த திரைப்படம் தொடர்பாக புகார் எழுந்துள்ளதால், புதிய சென்சார் குழு இந்த படத்தை தணிக்கை செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், சில காட்சிகளை நீக்கினால் UA சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை குழு வாரியம் கூறியதாகவும், அக்காட்சிகளை படக்குழு நீக்கியதாகவும் தங்கள் தரப்பு வாதத்தினை முன் வைத்தார். மேலும் அனைத்து நடைமுறைகளை பின்பற்றி இருப்பதாகவும், அவை அனைத்தையும் கண்காணிப்பு அதிகாரியும் பார்த்து உறுதி செய்துள்ளார். இந்நிலையில் யாரோ புகார் அளித்துள்ளதாக கூறி, சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

ஜனநாயகன் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடிய காட்சிகள் இருப்பதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் ஜனநாயகன் திரைப்படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதே நேரம் குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என படக்குழு நிர்பந்திக்க முடியாது எனவும் தன்னுடைய வாதத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் (ஜன.9) வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜனநாயகன் டிக்கெட் ரூ.1000-க்கு விற்பனை? ரசிகர்கள் புகார்

ஜனநாயகன் திரைப்படம் நாளை மறுநாள் (ஜன.9) வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்த நிலையில், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.