'பரவசமான தருணம்’: மாரி செல்வராஜ் - இளையராஜா படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கும் ’மஞ்சணத்தி’ படத்தில் நடிகர்கள் கதிர், கயடு லோஹர் ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Published : June 1, 2026 at 12:58 PM IST
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கவுள்ள ’மஞ்சணத்தி’ படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் 6வது படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'மஞ்சணத்தி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மஞ்சணத்தி படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ, மாரி செல்வராஜ் சொந்த ஊரான புளியங்குளத்தில் 'இளையராஜாக்கள் கபாடி கழகம்' என்ற காட்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, தனியார் யூடியூப் சேனலில் மாரி செல்வராஜிடம் இளையராஜாவுடன் எப்போது பணியாற்றப் போகிறீர்கள்? என்ற கேட்கப்பட்ட பின்னணி குரல் இடம்பெறுகிறது.
அப்போது ”இளையராஜா ஒரு இமயம், அவரை சந்திப்பது ஒரு தெய்வீகமான அனுபவம். அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் உள்ளது. ஒட்டுமொத்த இசையாக இருக்கக் கூடிய இளையராஜாவிடம் பணியாற்றக் கூடிய அளவில் எனக்கு பக்குவம் வேண்டும்” என மாரி செல்வராஜ் கூறுகிறார்.
இதனிடையே மாரிசெல்வராஜ் இளையராஜாவை சந்திக்கும் வீடியோவும், ’மஞ்சணத்தி’ படத்திற்காக இளையராஜா இசையமைப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை 80களில் இளையராஜாவின் விண்டேஜ் பாடல்களை நினைவுப்படுத்துகிறது. மேலும் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”அந்த பரவசமான தருணம், இறுதியாக நிகழ்ந்துவிட்டது” என பதிவிட்டுள்ளார்.
“THE TRANSCENDENT MOMENT HAS FINALLY HAPPENED”
— Mari Selvaraj (@mari_selvaraj) June 1, 2026
FROM
ILAIYARAAJA X MARI SELVARAJ https://t.co/QUefPsHLg5 #M6 #MANJANATHI@ilaiyaraaja @navvistudios @divyamari @thinkmusicindia @teamaimpr pic.twitter.com/sfdNDGcVum
இப்படத்தை மாரி செல்வராஜ் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ’மஞ்சணத்தி’ திரைப்படம் ’வாழை’ படத்தின் தொடர்ச்சி என கூறப்படும் நிலையில், நடிகர்கள் கதிர், கயாடு லோஹர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.
| இதையும் படிங்க: நான் 'ரீல்' முதலமைச்சர்; விஜய் தான் உண்மையான ‘ரியல் முதல்வன்’ - நடிகர் அர்ஜூன் பாராட்டு |
தமிழ் சினிமாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் அடித்தட்டு மக்களை மையமாக கொண்டு பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடைசியாக, இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ’பைசன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் தான் இயக்கிய ’மாமன்னன்’ படத்தில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்றிய நிலையில், தற்போது அவரது படத்திற்கு இளையராஜா இசையமைப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

