ETV Bharat / entertainment

”ஜனநாயகன் வெளியாகும் அன்று தான் பொங்கல்” - விஜய்க்கு திரைத்துறையில் பெருகும் ஆதரவு

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் படத்தில் விஜய்
ஜனநாயகன் படத்தில் விஜய் (@KvnProductions)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 2:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு திரைத்துறையினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’ஜனநாயகன்’. தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் படங்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஜனநாயகன் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிரெய்லரும் யூடியூபில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

மேலும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உணர்வுப்பூர்மான கண்ணோட்டத்தில் இப்படத்தை எதிர்நோக்கி உள்ளனர். கிட்டதட்ட அனைத்து விஜய் ரசிகர்களும் ஜனநாயகன் படத்தை முதல் நாள் பார்த்து விட வேண்டும் என ஆவலாக காத்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதமே ’ஜனநாயகன்’ திரைப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை படம் சென்சார் செய்யப்படவில்லை.

இதுதொடர்பான வழக்கில் நாளை (ஜன.9) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனைகளால் நாளை வெளியாகவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் நேற்றிரவு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், சினிமாத் துறையினர் பலர் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ அன்புள்ள விஜய் அண்ணா... பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதை விட பெரிய புயல்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்குகிறது“ என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மனம் உடைந்து விட்டது, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் ஒரு தம்பியாக நடிகர் விஜய்யுடன் துணை நிற்கிறேன். உங்களுக்கு படம் வெளியிட பொங்கல் விடுமுறை நாட்கள் தேவையில்லை. உங்களது படம் வெளியாகும் அன்று தான் பொங்கள் பண்டிகை” என கூறியுள்ளார்.

நடிகர் சிபி சத்யராஜ் பதிவில், ”ஜனநாயகன் படத்தை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு சரியான களத்தை அமைத்து தருகிறது. நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என கூறியுள்ளார்.

நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. ஜனநாயகன் படத்திற்காக அனைத்து ரசிகர்களும் துணை நிற்பார்கள். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு தம்பியாக துணை நிற்பேன். ஒரு பார்வையாளராக ரசிகர்களுடன் துணை நிற்பேன். ஜனநாயகன் ரிலீஸ் அன்று தான் பொங்கல் பண்டிகை. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் டிமாண்டி காலனி, கோப்ரா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து எக்ஸ் பதிவில், "பெரிய படங்களுக்கே சென்சர் பிரச்சனை வருகிறது என்றால், எந்த படங்களுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். நியாயமாக செயல்படாத ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் நஷ்டம் ஏற்படுத்தும் சென்சார் குழு கண்டிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் சரியாக விஷயத்திற்கு குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தணிக்கை துறை மூலம் நெருக்கடி - விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த மாணிக்கம் தாகூர்

மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். சல்லியர்கள் போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காதது, சென்சார் பிரச்சனையால் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போவது, பராசக்தி பட டிக்கெட் முன்பதிவு சென்சார் பிரச்சனையால் பாதிக்கப்படுவது என தமிழ் சினிமாவுக்கு இது கடினமான காலம் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபு, அமீர், ரத்னகுமார் ஆகியோரும் ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.