ETV Bharat / entertainment

தணிக்கை வாரியம் மூலம் நெருக்கடி - விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த மாணிக்கம் தாகூர் எம்பி

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வரும் மாணிக்கம் தாகூர், தற்போது விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 10:19 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: திரைப்பட தணிக்கை வாரியத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், ஜனநாயகன் படம் திரைக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நடைபெற்ற விசாரணையில், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டிய தேவை இருப்பதாக மத்திய தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதற்கு பட தயாரிப்பு நிறுவனம் கடும் அதிருப்தி தெரிவித்தது. எந்த புகாரும் வராத நிலையில், படத்தை மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தும் அதிகாரம் தணிக்கை வாரியத்திற்கு இல்லை என்றும் தங்கள் தரப்பு வாதத்தை பட தயாரிப்பு நிறுவனம் முன் வைத்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமம் பெற்றுள்ள ஆர்.எப்.டி. பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக நேற்று மாலை அறிவித்தன. இதன் மூலம் வெளிநாடுகளிலும் ஜனநாயகன் படம் திட்டமிட்டப்படி நாளை வெளியாகாது. இந்நிலையில், நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருப்பதால், இந்தியாவிலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் நேற்று நள்ளிரவு அறிவித்தது.

விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அரசியல்ரீதியாக வழங்கப்படும் அழுத்தம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவை இல்லை. தணிக்கை வாரியத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் தற்போது தணிக்கை வாரியத்தையும் மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. அதிகாரத்தின் முன்பு கலையை மண்டியிட செய்தால் ஜனநாயகம் நிலைத்து இருக்க முடியாது. அரசியலமைப்பு சட்டம் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது" என பதிவிட்டுள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வரும் மாணிக்கம் தாகூர், தற்போது விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.