தமிழக மக்கள் எதிர்பார்ப்பை விஜய் நிறைவேற்ற வேண்டும்: லெஜண்ட் சரவணன் வலியுறுத்தல்
மக்கள் பணம் மக்களுக்கே அதிகம் செலவழிக்க வேண்டும் என இளைஞர்கள் வாக்களித்து, தமிழ்நாட்டில் இந்த வரலாற்று புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர் என லெஜண்ட் சரவணன் கூறியுள்ளார்.

Published : May 6, 2026 at 11:50 AM IST
தஞ்சாவூர்: தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள இந்த வாய்ப்பை விஜய் திறம்பட பயன்படுத்தி, மக்களுடைய எதிர்பார்ப்புகளை 100 சதவீதம் நிறைவேற்றிட வேண்டும் என லெஜண்ட் சரவணன் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு லெஜண்ட் சரவணன் வருகை தந்தார். அப்போது அங்கு திரண்டு வந்த அவரது ரசிகர்கள் பலர், அவருக்கு மாலை அணிவித்தும், பொன்னடைகள் அணிவித்தும் வரவேற்றனர். பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், ”சமீபத்தில் எனது நடிப்பில் லெஜண்ட், லீடர் ஆகிய இரு படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 3வது படமும் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில், 3 கதாபாத்திரங்கள் நடிக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து தேர்தல் முடிவுகள் குறித்து பேசுகையில், “நான் அரசியலுக்கு வருவது குறித்து காலம் பதில் சொல்லும். தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் என்பது, இளைஞர்களிடம் மாற்றம் வேண்டும் என்ற எழுச்சியால் சாத்தியமாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் தொடர்ந்து இந்த இளைஞர்களின் எழுச்சியை பார்த்து வருகிறோம்.
ஊழலற்ற ஆட்சி, வரிகளை குறைத்திட வேண்டும், மக்கள் பணம் மக்களுக்கே அதிகம் செலவழிக்க வேண்டும் ஆகிய எதிர்பார்ப்புகளில் மக்கள் இந்த சரித்தர வெற்றியை அளித்துள்ளனர். அந்த காலகட்டங்களில், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆட்சிகள் சூழ்நிலைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டது” என்றார்.
கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி குறித்த கேள்விக்கு, ”அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. எதுவும் நிரந்தரமானதல்ல, மாபெரும் வெற்றி கண்டுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்கள் அளித்துள்ள இந்த வாய்ப்பை அவர் திறம்பட பயன்படுத்தி, மக்களுடைய எதிர்பார்ப்புகளை 100 சதவீதம் அவர் நிறைவேற்றிட வேண்டும்” என்றார்.
தமிழ்நாட்டில் வரலாற்று சாதனை ஆட்சி மாற்றம் என்ற போதும், புதுச்சேரியில் அது எந்தவிதமான, தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், ”எதிர்பார்ப்புகளை மீறி நடப்பது தான் அரசியல். அதனை கணிக்கவும், உணரவும் முடியாது. எதிர்காலத்தில், காலம் ஒத்துழைத்தால் நான் கூட அரசியலுக்கு வரலாம். எனது முழு நேரம் பணி தொழில். எனது பேரார்வம் சினிமா” என்றார்.

