ETV Bharat / entertainment

திரைப்படத்தை தணிக்கை செய்ய சென்சார் போர்டுக்கு கால நிர்ணயம்: கமல்ஹாசன் எம்பி வலியுறுத்தல்

தணிக்கைக்கு செல்லும் படத்தில் காட்சிகளை திருத்தவும், நீக்கவும் பரிந்துரைக்கப்படுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கமல்ஹாசன் (கோப்புப்படம்)
கமல்ஹாசன் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 3:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: திரைப்படத்தை தணிக்கை செய்வது தொடர்பாக சென்சார் போர்டுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என கமல்ஹாசன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இதனிடையே, 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு, திரையுலகினரும், கட்சி வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், 'ஜனநாயகன்' தணிக்கை விவகாரம் தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பகுத்தறிவால் வழி நடத்தப்படும் இந்திய ஜனநாயகம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல. எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் சிறு வணிகங்களின் கூட்டு முயற்சியாகும். தெளிவான திட்டமிடல் இல்லாத போது படைப்பாற்றல் தடைபடுகிறது. மேலும், பொது நம்பிக்கை பலவீனப்படுகிறது.

இப்போது நமக்கு தேவை, தணிக்கை சான்றிதழ்க்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட வெட்டு அல்லது திருத்தத்திற்கும் செயல்முறைகளை கொள்கைரீதியாக மறுபரிசீலனை செய்வதாகும்.

ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்றிணைந்து நமது அரசுடன் அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தருணம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்பு சுதந்திரத்தை பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புக்களை நிலைநிறுத்தும். அதன் கலைஞர்கள் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தும்" என்று அதில் கூறியுள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்தை போன்று இன்று திரையரங்குகளில் வெளியான பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இருந்தாலும் இந்த படத்திற்கு கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. குறிப்பாக, 25 இடங்களில் சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு 'கட்' கொடுத்தனர். குறிப்பாக, 'அண்ணா தமிழ்நாட்டை ஆளுகிறான்', 'தீ பரவட்டும்' 'இந்திய அரக்கி' உள்ளிட்ட சில வார்த்தைகளை படத்தில் இருந்து நீக்க சென்சார் போர்டு அதிகாரிகள் படக் குழுவினருக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த வார்த்தைகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு, இன்று காலை படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.