படைப்பு சுதந்திரத்தை அரசியல் காரணங்களுக்காக முடக்குவதா? விஜய்க்கு ஜோதிமணி எம்.பி. ஆதரவுக்கரம்
அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் ஆயுதமாகி விட்டது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சாடியுள்ளார்.

Published : January 8, 2026 at 1:54 PM IST
சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், படைப்பு சுதந்திரத்தை அரசியல் காரணங்களுக்காக முடக்க நினைப்பது ஆபத்தானது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’, நாளை (ஜன.9) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டியதுள்ளதாக மத்திய தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் பதிலளித்திருக்கிறது.
இரு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பானது நாளை (ஜன 9) வழங்கப்படவுள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமும் அறிவித்துவிட்டது. விஜய் அரசியலில் கால் வைத்திருப்பதால், இது அரசியல்ரீதியாக கொடுக்கப்படும் அழுத்தம் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்திருப்பதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்.
ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது. அதை இப்படி முடக்க நினைப்பது படைப்பு சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில், இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள… pic.twitter.com/lbOlaFD47j
— Jothimani (@jothims) January 8, 2026
ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்து கொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள், காட்சிகள், தொலைக்காட்சி, யூடியூப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக் கொண்டிருக்கின்றன. இதை பல கோடி பேர் பார்க்கின்றனர். இந்த சூழலில், திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
பெண்களை ஆபாசமாக பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களை பேசுவது போன்றவை தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால், இவை இல்லாமல் வெளிவரும் படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விஷயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரையில், அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுலின் எச்சரிக்கை நிஜமானது: மற்றொரு காங்கிரஸ் எம்பியான விஜய் வசந்தும் ஜயநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சினிமாவை ஒடுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அவமதிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி அவர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Nine years ago, @RahulGandhi ji cautioned the govt. against disrespecting Tamil culture and identity by stifling Tamil cinema.
— Vijay Vasanth (@iamvijayvasanth) January 8, 2026
Today, that warning rings true again as BJP deliberately withholds the censor certificate for #Jananayagan, effectively blocking its release and… https://t.co/sLrwHlNqC6
இன்று அந்த எச்சரிக்கை மீண்டும் உண்மையாகியுள்ளது. பாஜக வேண்டுமென்றே 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை நிறுத்தி வைத்து, அதன் வெளியீட்டைத் தடுத்து, தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளது' என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை: காங்கிரஸ் எம்பிக்களின் இந்த குற்றச்சாட்டை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்மடமாக மறுத்துள்ளார்.
இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும்… pic.twitter.com/EgvgRGU3LH
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) January 8, 2026
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் விவகாரத்திற்கும் பாஜகவிற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் இந்த விஷயத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. நாங்களும் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், தணிக்கை வாரியத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும் தமிழகத்தில் ஒரு சக்தியாக விஜய் உருவாகிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

