ETV Bharat / entertainment

ஜனநாயகன் திரைப்படம் நாளை ரிலீஸ் இல்லை - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

தற்போது எடுத்துள்ள இந்த முடிவு எளிதானதல்ல. திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகன் பட போஸ்டர்
ஜனநாயகன் பட போஸ்டர் (@KvnProductions)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 12:08 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிப்பு வெளியான போதே, 'ஜனநாயகன்' திரைப்படம் மீது அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்தனர். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள நிலையில், விவேக் பாடல்களை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தில் போஸ்டர் வெளியானது முதல் கடைசியாக நடைபெற்ற படத்தின் பிரமாண்ட இசை விழா, டிரெய்லர் வரை அனைத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ’ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து விளம்பரப்படுத்தியது. இதனையடுத்து திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வந்தனர்.

இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி பி.டி. ஆஷா முன்பு நேற்றும் நடைபெற்றது.

அப்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடிய காட்சிகள் இருப்பதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் ஜனநாயகன் திரைப்படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதே நேரம் குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என படக்குழு நிர்பந்திக்க முடியாது எனவும் தன்னுடைய வாதத்தில் தெரிவித்தார்.

தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கை
தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கை (@KvnProductions)

இதனையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா வழக்கின் தீர்ப்பு நாளை (ஜன.9) வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை திட்டமிட்டபடி ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியிட முடியவில்லை என தயாரிப்பு நிறுவனமான கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். தற்போது எடுத்துள்ள இந்த முடிவு எளிதானதல்ல. திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அதுவரை பொறுமை காத்து தொடர்ந்து ஆதரவு தருமாறு ரசிகர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.