'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் - விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பட தயாரிப்பாளர்
'ஜனநாயகன்' திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் நம்பிக்கை உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published : January 10, 2026 at 9:58 AM IST
சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்சனை காரணமாக திட்டமிட்டப்படி நேற்று வெளியாகாததால், படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் நாராயணா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக அன்போடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. கடந்த 2 நாட்களாக எனக்கு தொடர்ந்து ஏராளமான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் சில உண்மைகளை சொல்ல விரும்புகிறோம். ஆனால், படம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் எதை கூற வேண்டும்? எதை கூறக்கூடாது? என்று எங்களுக்கு கட்டுப்பாடு உள்ளது.
இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி சென்சார் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், படத்தை தணிக்கை குழு பார்த்தது. தொடர்ந்து, டிசம்பர் 22 ஆம் தேதி எங்களுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில், படத்தில் சில மாற்றங்கள் செய்யக் கோரியும், படத்திற்கு UA 16+ சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சென்சார் பரிந்துரையின்படி படத்தில் சில மாற்றங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்தோம். ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதனால், சான்றிதழ் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்தோம். ஆனால், படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பு, ஜனவரி 5 ஆம் தேதி படம் மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.
— KVN Productions (@KvnProductions) January 9, 2026
ஆனால், புகார் அளித்தது யார்? என்பது குறித்து தெரியாததால் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், UA 16+ சான்றிதழை வழங்க உத்தரவிட்டது. ஆனால், சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தது. இதனால், சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கான தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
| இதையும் படிங்க: சென்சார் போர்டு ஒன்றிய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது - 'ஜனநாயகன்' விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் |
எனவே, இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுடன் நின்ற ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் (Distributors) , திரையரங்கங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். படத்தை திட்டமிட்டப்படி திரையரங்குக்கு கொண்டு வருவதற்காக அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டோம். இருப்பினும், குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை.
இது, இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மிக சோதனையான நேரம். குறிப்பாக, நடிகர் விஜய் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பிரியாவிடை அளிக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர். உங்கள் அனைவரின் பொறுமை, நம்பிக்கை மற்றும் ஆதரவு எங்களுக்கு மிகுந்த வலிமையை கொடுக்கிறது. நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.
முன்னதாக, 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக படத்தில் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இது தொடர்பாக படக்குழு தாக்கல் செய்த வழக்கில், படத்திற்கு உடனடியாக U/A தணிக்கை சான்று வழங்குமாறு நேற்று உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரணை செய்த தலைமை நீதிபதி, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

