’கஜினி’ படத்தின் வில்லன் நடிகர் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்
‘கஜினி’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த பிரதீப் ராவத், தனது மிரட்டலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

Published : August 5, 2026 at 11:00 AM IST
ஹைதராபாத்: 'கஜினி' படத்தின் வில்லன் நடிகர் பிரதீப் ராவத் (74) புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக பிவண்டி பகுதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பிரதீப் ராவத்தை, அவரது மனைவி கல்யாணி ராவத் மற்றும் அவரது மகன் விக்ரமாதித்யா ராவத் ஆகியோர் கவனித்து வந்தனர்.
இந்நிலையில் புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று மாலை (ஆகஸ்ட் 4) காலமானார். பிரதீப் ராவத் உயிரிழந்தது சினிமாத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகை சேர்ந்த யஷ்பால் சர்மா உள்ளிட்டோரும் தமிழ் திரையுலகினரும் அவரது உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வில்லன் நடிகர் பிரதீப் ராவத் தனது 74வது வயதில் காலமானார்#PradeepRawat | #passedaway | #Villainactor | #EtvBharatTamilNadu pic.twitter.com/FqErNMbAHY
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) August 5, 2026
கடந்த 1952ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ரா இயக்கிய ’மகாபாரதம்’ டிவி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரம் மூலம் தனது திரைவாழ்வை தொடங்கினார். தொடர்ந்து 1985ஆம் ஆண்டு ’மேரி ஜங்’ திரைப்படம் மூலம் பாலிவுட் உலகில் கால் பதித்தார். பின்னர் ’சமுந்தர்’ மற்றும் ’அக்னிபாத்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அமீர்கானுடன் இவர் நடித்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
’லகான்’ படத்தில் பிரதீப் ராவத் நடித்த தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் பாலிவுட் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கிய பிரதீப் ராவத், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் உள்ளிட்ட பலர் நடித்த ‘கஜினி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
| இதையும் படிங்க: ஏஐ தொழில்நுட்பத்தில் கோச்சடையான்| திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி |
இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த பிரதீப் ராவத், தனது மிரட்டலான நடிப்பின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். அதன்பின்னர் அஜித்குமார் நடித்த ‘வீரம்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ’நாயக்’, ’ஸ்டாலின்’, ’நேனுகொடனே’, ’நேனு சைலஜா’, ’சரைநோடு’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். கடைசியாக பாலிவுட்டில் விக்கி கௌஷல் நடித்த ‘சாவா’ படத்தில் யேசாஜி கங்க் என்ற கேரக்டரில் நடித்தார்.

