நடிகர் அஜித்குமார் தாயார் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Published : May 31, 2026 at 1:17 PM IST
சென்னை: நடிகர் அஜித்குமார் தாயாரின் இறுதிச்சடங்கு இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதனிடையே துபாய் நாட்டில் கார் ரேஸிங் குறித்த பணியில் ஈடுபட்டிருந்த அஜித்குமார், தாயார் இறந்த செய்தி கேட்டு, உடனடியாக நேற்று இரவு சென்னை திரும்பினார்.
இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மோகினி அம்மாள் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் அஜித்குமாருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முன்னாள் திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், த்ரிஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்று காலை நடிகர்கள் பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, மற்றும் நடிகைகள் என பலர் அஞ்சலி செலுத்தி, அஜித்குமாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதனிடையே, அஜித்குமார் தாயார் மோகினி அம்மாளின் இறுதிச் சடங்கு குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்குபெறும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் என அவரது குடும்பத்தினர் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
| இதையும் படிங்க: நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் - முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் |
அதன்படி, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்தில் இருந்து அவரின் தாயார் உடல் காவல்துறையின் பாதுகாப்புடன் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மோகினி அம்மாளின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணி வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தற்போது அவரது தாயாரும் உயிரிழந்துள்ளது அஜித்குமார் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

