செளரவ் கங்குலியின் புதிய அவதாரம் - பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம்
முன்னதாக பல்வேறு மொழிகளில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சலில் அன்கோலா, வினோத் காம்ப்ளி, சித்து, ஸ்ரீசாந்த், மறைந்த ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

By ANI
Published : August 31, 2026 at 1:09 PM IST
ஹைதராபாத்: ’பிக்பாஸ் 3’ பங்களா நிகழ்ச்சியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தொகுத்து வழங்குகிறார்.
பிரபலங்கள் ஒரே வீட்டில் செல்போன், டிவி உள்ளிட்ட எந்தவித தொழில்நுட்பம் மற்றும் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்ற சவாலுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த பிக்பாஸ் வீட்டில் அனைத்து பகுதிகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். பிரபலங்களின் குணாதிசயங்கள் இந்த நிகழ்ச்சி மூலம் வெளியில் தெரியவரும் என்பதால் மக்களிடையே விரைவில் கவனம் பெற்றது.
வெளிநாடுகளில் இருந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் முதலில் நடைபெற்றது. முதல் சீசனில் இருந்து நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். பின்னர் பல்வேறு மொழிகளில் தொடங்கப்பட்ட நிலையில், தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாள மொழியில் மோகன்லால், கன்னட மொழியில் சுதீப் ஆகியோர் தொகுத்து வழங்கினர். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ’பிக்பாஸ் சீசன் 10’ விரைவில் தொடங்குகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் செளரவ் கங்குலி
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ’பிக்பாஸ் 3 பங்களா’ நிகழ்ச்சியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலி தொகுத்து வழங்குகிறார். நேற்று இரவு ’தாதா’ என அழைக்கப்படும் செளரவ் கங்குலியின் எண்ட்ரியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர் பிக்பாஸ் வீட்டை அவர் பார்வையாளர்களுக்கு சுற்றி காண்பித்தார். பின்னர் திடீரென முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி நடனம் ஆடினார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் 15 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தபட்டனர்.
அதில் நடிகர்கள், பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். பரத் கால், துர்னிபார் சாஹா, நந்தினி ராய் உள்ளிட்ட பலர் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சவுரவ் கங்குலி, பின்னர் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
| இதையும் படிங்க: ’கம்பேக்’ கொடுத்த நிவின் பாலி - ரூ. 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ |
கடந்த 2012ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கங்குலி, பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை பணியாற்றினார். மேலும் ஊடக நிகழ்ச்சிகளில் அவ்வப் போது பங்கேற்றுள்ள கங்குலி, ’Dadagiri Unlimited’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை 15 வருடங்கள் தொகுத்து வழங்கினார். தற்போது சவுரவ் கங்குலி பிக்பாஸ் தொகுப்பாளரானது பேசுபொருளாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள்
இந்த பிக்பாஸ் வீட்டில் திரைக் கலைஞர்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் வீரர்களும் பல்வேறு மொழிகளில் பங்கேற்றுள்ளனர். முன்னாள் இந்திய வீரர் சலில் அன்கோலா, வினோத் காம்ப்ளி, சித்து, ஸ்ரீசாந்த் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மறைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஹிந்தி மொழி பிக்பாஸ் 5-ஆவது சீசனில் பங்கேற்றுள்ளார்.

