இளையராஜா பாடல்களை பயன்படுத்தமாட்டோம்; அஜித் பட நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் உறுதி
'குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு பின் திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Published : December 15, 2025 at 7:26 PM IST
சென்னை: நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த மாட்டோம் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது அனுமதியில்லாமல், "இளமை இதோ இதோ", "ஒத்த ரூபாயும் தாரேன்", "என் ஜோடி மஞ்ச குருவி" ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்கக் கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதில், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு பின் இளையராஜா பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து தற்போது நீக்கி இருப்பதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று (டிச 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், ''குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை நாங்கள் பயன்படுத்தமாட்டோம்'' என உறுதி அளித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

