ETV Bharat / entertainment

‘ஐ அம் கேம்’ படத்தில் நடிப்பதற்கு முதலில் பயமாக இருந்தது - மனம் திறந்த நடிகர் துல்கர் சல்மான்

விஜய் சார் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை எனவும் நடிகர் ஆண்டனி வர்கீஸ் கூறியுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 12:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ‎‘ஐ அம் கேம்’ படத்தில் நடிப்பதற்கு முதலில் பயமாக இருந்ததால் தான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் துல்கர் சல்மான், கயாடு லோஹர், கதிர், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’ (Im Game) திரைப்படம் நாளை (செப்டம்பர் 3) வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் பேசுகையில், “தமிழில் விஜய் சார் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை. ‎தற்போது விஜய் சார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டார். அதனால் இனிமேல் அவருடன் நடிக்க முடியாது. எனக்கு அஜித் மற்றும் சூர்யா ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது” என்றார்.

‘ஐ அம் கேம்’ படக்குழு
‘ஐ அம் கேம்’ படக்குழு (ETV Bharat Tamil Nadu)

அதனை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், “தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்துவிட்டால், அந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள். ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தில் அதிகமான தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், இது நேரடியாக உருவாக்கப்பட்ட தமிழ் திரைப்படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும்.

‎நாங்கள் இதுவரை தயாரித்த திரைப்படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய படம். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தைப் போன்று இந்த படத்திலும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கும். ‎கதிர் மிகச்சிறந்த நடிகர், நான் அவருடைய ரசிகன். இயக்குநர் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார், அவர் எங்களுக்கு ஒரு குருவாக இருந்துள்ளார்.

‎மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக இருக்கும் ஆண்டனி வர்கீஸ் எங்களுக்காக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். அவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ‎இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் தான். நான் எந்த திரைப்படத்தில் நடித்தாலும், அது உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள். அந்த வகையில் இந்த திரைப்படமும் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க: விஜய் இல்லாத திரையுலகம் எப்படி இருக்கிறது? எதிர்பார்ப்பைக் கிளப்பிய நடிகர் கார்த்தியின் பதில்

ஒரு திரைப்படத்தின் கதையை கேட்கும் போது, அந்த கதாபாத்திரம் குறித்து பயம் ஏற்பட்டால், அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரும். ‘காந்தா’ திரைப்படத்தில் நடிக்கும் போதும் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஏற்று நடிக்கப் போகிறேன் என்ற பயம் இருந்தது. அதே போன்ற பயம் தான் இந்த திரைப்படத்திலும் இருந்தது. அதனால் தான் இந்த படத்தில் நடித்தேன்.

‎எனக்கு ரசிகர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு நல்ல திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.