ETV Bharat / entertainment

Thalaivar 173: ரஜினியின் 'தலைவர் 173' திரைப்படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி; வெளியானது அறிவிப்பு

சிவகார்த்திகேயனை வைத்து 'டான்' என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சிபி சக்கரவர்த்தி, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரஜினியுடன் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி
ரஜினியுடன் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (@Sugumar_Tweetz)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 11:44 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்து விட்டது. 'டான்' திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் 'தலைவர் 173' படத்தை இயக்குகிறார் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் படம் சக்கை போடு போட்ட நிலையில், ஜெயிலர் பாகம் 2-க்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே வெயிட்டிங்கில் உள்ளது.

இந்த ஹைப் அடங்குவதற்குள்ளாகவே ரஜினியின் அடுத்த திரைப்படமான 'தலைவர் 173' படம் குறித்த பேச்சுகள் அடிபட்டன. முதலில் இந்த திரைப்படத்தில் ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து நடிப்பார்கள் என கூறப்பட்டது. பின்னர், இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என உறுதியான தகவல்கள் வெளியாகின.

அதே சமயத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் 'தலைவர் 173' திரைப்படத்தை தயாரிக்கிறது என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த திரைப்படத்தை சுந்தர் .சி இயக்குவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்த நிலையில், இந்த ப்ராஜெக்டில் இருந்து விலகுவதாக சுந்தர் .சி பகிரங்கமாக தெரிவித்தார். இது, இந்திய திரையுலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது பற்றி கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், "என்னுடைய நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு கதை பிடிக்கவில்லை; அவருக்கு பிடிக்கும் வரையில் கதை கேட்போம்" எனக் கூறியிருந்தார். இதனால் ரஜினி படம் பற்றிய பேச்சுகளும், யூகங்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்த படியே இருந்தன.

இந்நிலையில், 'தலைவர் 173' குறித்த முக்கிய அறிவிப்பு நாளை (இன்று) காலை 11 மணிக்கு வெளியாகும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. இதனால் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே காலை 11 மணிக்காக காத்துக் கொண்டிருந்தது.

அதன்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இன்று காலை 11 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் அதிரடி அப்டேட்டை வெளியிட்டது. அதில், 'தலைவர் 173' திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயனை வைத்து 'டான்' திரைப்படத்தை இயக்கியவர் தான் சிபி சக்கரவர்த்தி. 'டான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூலை வாரி குவித்ததால் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மீது லைம் லைட் விழுந்தது. அவரை தேடி தயாரிப்பாளர்கள் படையெடுக்க தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரஜினியின் 'தலைவர் 173' படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிபி சக்கரவர்த்தி.