அரசியலில் நமக்கு யார் தேவை என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் - இயக்குநர் மாரி செல்வராஜ்
சினிமாவுக்கு மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார்.

Published : December 12, 2025 at 3:19 PM IST
திருச்சி: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நமக்கு யார் தேவை? யார் தலைவராக வேண்டும்? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி துவக்க விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “10 ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன். என்னை டிவியிலிருந்து பேட்டி எடுக்க வருவார்கள் என என் பெற்றோர்களிடம் கூறினேன்.
ஆனால் 10 ஆம் வகுப்பில் நான் தேர்ச்சி அடையவில்லை. ஆனால் பரியேறும் பெருமாள் வெளியான பின் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு சென்று பேட்டி எடுத்தார்கள். நான் தனித்து நின்றாலும் கூட என்னுள் இருக்கும் கலை என்னை ரசிக்க கற்று கொடுத்தது. ரஜினி, விஜய் படங்களை நான் பார்த்து ரசித்தேன். அதன் பின் நான் புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன், பின்னர் தான் எனது வாழ்க்கையே மாறியது.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும். கலை என்பது ஆடல், பாடல் என்பது மட்டுமல்ல தன்னிலை உணர்தலோடு செயல்பட வேண்டும் என்பது தான், அதற்கு வாசிப்பு தான் அடிப்படை. உங்களை ரசிக்கவும் கொண்டாடவும் உங்களை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். சினிமாவுக்கு செல்வது, விளையாட மைதானத்திற்கு செல்வது போன்று, ஆர்வத்தோடு நூலகத்திற்கு சென்று புத்தகங்களை படிக்க வேண்டும்.
100 தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட கதை தான் பரியேறும் பெருமாள், ரஞ்சித் இருந்ததால் தான் பரியேறும் பெருமாளை என்னால் எடுக்க முடிந்தது. சமூக பொறுப்புள்ள இயக்குநராக என்னை மாற்றியது புத்தக வாசிப்பு தான். உரையாடல் என்பது மிகவும் முக்கியமானது. நாம் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம் என அனைவரிடமும் மனம் திறந்து உரையாட வேண்டும். நம் உரையாடலுக்கு வார்த்தைகள் மிகவும் முக்கியம் அந்த வார்த்தைகளை புத்தக வாசிப்பின் மூலம் நாம் பெற முடியும்” என பேசினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ், “சினிமா, ஓடிடியால் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தங்கள் குழந்தைகளின் வாசிப்பை பெற்றோர்கள் தான் ஊக்குவிக்க வேண்டும், பெற்றோர்கள் வாசிக்கத் தொடங்கினால் குழந்தைகளும் வாசிப்பார்கள். சினிமா, கோயில், பூங்கா உள்ளிட்டவற்றுக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்வது போல் நூலகங்களுக்கும் அழைத்து சென்றால் வாசிப்பு மேம்படும்.
மக்கள் எதை விரும்பி பார்க்கிறார்களோ, அதை வைத்து தான் திரைப்படங்கள் வெளியாகிறது. மக்கள் மனநிலை மாறினால் சினிமாவும் மாறும். போதை பொருட்கள் அவசியமற்றது என எல்லோருக்கும் தெரியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களுடன் நண்பர்களாக வேண்டும். அப்போது இன்றைய இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்" என்றார்.
நடிகர்கள் சினிமாவிற்கு வருவதை பற்றி பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அனைத்து துறைகளுக்கும் யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நமக்கு யார் தேவை யார் தலைவராக வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எந்த துறையாக இருந்தாலும் கொள்கையை வெளிப்படையாக கூற வேண்டும். சினிமா துறைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அவசியமில்லை, அனைத்து துறைகளும் முக்கியமானது. அதிக மக்களோடு தொடர்புடைய துறையான சினிமாத்துறையை நல்ல விதத்தில், நேர்மையாக கையாள வேண்டும்.
| இதையும் படிங்க: ' ’படையப்பா’ படத்தை பாராட்டிய கலைஞர் கருணாநிதி' - ரஜினிகாந்திற்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து |
நான் சிறு வயதிலிருந்து அரசியலில் இருந்தேன், அந்த அரசியலில் இருந்து தான் சினிமாவிற்கு வந்தேன். சினிமா வழியாக அரசியல் பேசுகிறேன். என்னுடைய அரசியல் கலை பண்பாட்டோடு இணைந்தது. பழைய படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியானால் மக்கள் விருப்பபட்டால் பார்ப்பார்கள். அதுவும் ஒரு பொழுதுபோக்கு தான். படங்களை ரீ - ரிலிஸ் செய்ய கூடாது என்பதில்லை” என்றார்.

