ETV Bharat / entertainment

’ரன்’ படத்திற்கு முதலில் விஜய் தான் ஹீரோ - மனம் திறந்த இயக்குநர் லிங்குசாமி

நம்முடன் எம்ஜிஆர் ரூபத்தில் விஜய் இருந்தது தெரியாமல் போய்விட்டது என விஜய் முதலமைச்சரானது குறித்து இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 11:57 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தான் இயக்கிய ரன், சண்டக்கோழி, வேட்டை ஆகிய படங்களில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

‎இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்த ’ரன்’ (Run) திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 10) ‘ரன்’ திரைப்படம் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

‎அப்போது பேசிய இயக்குநர் லிங்குசாமி, ”இன்றைய காலத்தில் ’ரன்’ போன்ற ஒரு திரைப்படம் ஓடும் என்று நம்பிக்கையுடன் மறுபடியும் ரீரிலீஸ் செய்கிறோம். கில்லி, படையப்பா போன்ற திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆன போது, நல்ல வசூலை பெற்றது. இருப்பினும் ‘குஷி’ படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அதேபோல, ‘சச்சின்’ திரைப்படம் வெளிவந்த போது சரியாக போகவில்லை; இருப்பினும் மறு வெளியீட்டில் சிறப்பாக ஓடியது. அதாவது அன்றைய காலகட்டத்தில் பெரிய இயக்குநர்களுக்கு இரண்டாவது திரைப்படம் வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும் என்கிற முனைப்போடு ’ரன்’ படத்தை எடுத்தேன்.

படத்தில் மீரா ஜாஸ்மின் நான் எதிர்பார்க்கக் கூடிய கதாநாயகியாக, சிறப்பாக நடித்த கொடுத்தார். ‘ரன்’ படத்தில் நடித்த விவேக், ரகுவரன் போன்றோர் மறைந்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் நடித்த படங்களே நினைவுகளாக இருக்கும்” என்று கூறினார்.

‎இன்றைய ஜென்-சி தலைமுறையினருக்கு ஏற்றுவாறு இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் படத்தின் காட்சிகளை வைத்து ’ரீல்ஸ்’ போடுவதற்காக உழைக்கிறோம் என ஒரு சிலர் கூறுகின்றனர். இது குறித்து கருத்து கேட்ட போது, “இந்தியாவில் ’துரந்தர்’ திரைப்படத்தில் நீங்கள் சொல்வது போல எந்த விதமான ரீல்ஸ் போடுவதற்காகவும் காட்சிகள் உருவாக்கப்பட்டவில்லை” என்றார்.

‎ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால், சமூக வலைதளங்களில் அந்த இயக்குநர் மீது தனி நபர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ’கங்குவா’ திரைப்படம் வந்த போது இயக்குநர் சிவாவை விமர்சனம் செய்தனர். அதேபோல் ’கூலி’ திரைப்படம் வந்த போது லோகேஷ் கனகராஜை விமர்சனம் செய்தனர். இதற்கு முன்னோடியாக இருப்பரே நீங்கள் தான், உங்கள் கருத்து என்ன? என கேட்டதற்கு, “‎ஒருவரின் மீது இருக்கக் கூடிய அதீத எதிர்பார்ப்பால் ஒரு சில நேரங்களில் தவறு நடந்து விடுகிறது.

நானும் கூட தவறு செய்து இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் நம்முடைய எதிரி கூட பாராட்ட வேண்டிய வகையில் திரைப்படம் எடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா நான் உட்பட ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை எடுத்தால் அந்த பேச்சு மாறிவிடும்” என பதிலளித்தார்.

‎உங்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்குமான தொடர்பு குறித்து லிங்குசாமியிடம் கேட்ட போது, ”‘ரன்’ படம் விஜய் பண்ண வேண்டியது, அந்த சமயத்தில் அவர் ’தமிழன்’ திரைப்படத்தில் நடித்ததால், எனது படத்தில் நடிக்க முடியவில்லை. தொடர்ச்சியாக ’சண்டக்கோழி’ திரைப்படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சி எடுத்தேன், அதுவும் நடக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து ’வேட்டை’ திரைப்படமும் விஜய் நடிப்பதாக இருந்தது, அந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. சரி திரைத்துறையில் தான் இருவரும் இணைந்து பயணிக்க முடியவில்லை. த.வெ.க-வில் சேர்ந்து நான் ஒரு வார்டு கவுன்சிலர் ஆவது ஆக வேண்டும் என்ற வகையில், முழுவதுமாக விஜய் அரசியலை ஆமோதிக்கிறேன்.

இதையும் படிங்க: இளையராஜாவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடல் விவகாரம்: ஜி.வி.பிரகாஷ் படத்தில் பயன்படுத்த தடை

முன்னதாக, தேர்தல் முடிவுகளை கிரிக்கெட் போட்டியை பார்ப்பது போல இயக்குநர் சங்கர் உள்ளிட்ட முக்கியமான இயக்குநர்கள் அனைவரும் உட்கார்ந்து பார்த்தோம். இந்திய அளவில் இப்படி ஒரு மேஜிக்கா? என அனைவரும் வியக்கத்தக்க வகையில் முடிவுகள் வெளிவந்தது. ‎நம்முடன் எம்ஜிஆர் ரூபத்தில் விஜய் இருந்துள்ளார். அது நமக்கு தெரியாமல் போய்விட்டதே என அந்த தருணத்தில் பரஸ்பரம் பேசிக்கொண்டோம்” என்றார்.