பிரதமர் மோடி அரசியல்வாதி விஜய்யோடு மோத வேண்டும்; நடிகர் விஜய்யோடு அல்ல! - காங்கிரஸ் ஆவேசம்
மிரட்டல் அரசியல் எப்போதும் தமிழ்நாட்டில் எடுபடாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Published : January 8, 2026 at 3:38 PM IST
புதுடெல்லி: நடிகர் விஜய்யுடன் மோதுவதை நிறுத்திவிட்டு, அரசியல்வாதி விஜய்யை பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் திரைக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நடைபெற்ற விசாரணையில், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டிய தேவை இருப்பதாக மத்திய தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கு பட தயாரிப்பு நிறுவனம் கடும் அதிருப்தி தெரிவித்தது. எந்த புகாரும் வராத நிலையில், படத்தை மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தும் அதிகாரம் தணிக்கை வாரியத்திற்கு இல்லை என்றும் தங்கள் தரப்பு வாதத்தை பட தயாரிப்பு நிறுவனம் முன்வைத்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'ஜனநாயகன்' படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமம் பெற்றுள்ள ஆர்.எப்.டி. பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அறிவித்தன. இதன்மூலம் வெளிநாடுகளிலும் ஜனநாயகன் படம் திட்டமிட்டப்படி நாளை வெளியாகாது. இந்நிலையில், நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருப்பதால், இந்தியாவிலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் நேற்று நள்ளிரவு அறிவித்தது.
விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அரசியல் ரீதியாக வழங்கப்படும் அழுத்தம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பிக்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் தேசிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Dear @PMOIndia @narendramodi Ji,
— Girish Chodankar (@girishgoaINC) January 8, 2026
The controversy surrounding actor Vijay's film 'Jana Nayagan' has sparked concerns about the misuse of political power. While political disagreements are understandable, targeting an artist's work is unacceptable.
The people of Tamil Nadu will… pic.twitter.com/eOwnV7Vkm9
இதனிடையே, ஜனநாயகன் பட விவகாரத்தில் தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாரக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜயின் திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று கிரிஷ் சோடங்கர் பதிவிட்டுள்ளார்.

