ETV Bharat / entertainment

'பராசக்தி'யில் 25 இடங்களில் 'கட்' கொடுத்த சென்சார் போர்டு; 'தீ பரவட்டும்' வசனம் மாற்றம்!

'தீ பரவட்டும்' என்ற வசனம் தணிக்கை குழுவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப 'நீதி பரவட்டும்' என்று மாற்றப்பட்டுள்ளது.

பராசக்தி திரைப்பட போஸ்டர்
பராசக்தி திரைப்பட போஸ்டர் (@DawnPicturesOff)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 7:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: பராசக்தி திரைப்படத்தில் தணிக்கை குழுவினர் 25 இடங்களில் 'கட்' கொடுத்துள்ள நிலையில், நீக்கப்பட்ட காட்சிகள், வார்த்தைகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் திருநாளுக்கு நடிகர் விஜய் நடிந்த ஜனநாயகன், நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படங்கள் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்த வகையில் இன்று ஜனநாயகன் திரைப்படமும், நாளை பராசக்தி திரைப்படமும் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

இதனிடையே சென்சார் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இந்நிலையில், 1960-களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையக்கருவாக வைத்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 'பராசக்தி' படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக நேற்று பேசிய கதாநாயகன் சிவகார்த்திகேயன், நம்பிக்கையுடன் இருங்கள். நேர்மறையான சிந்தனையாளர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் இன்று காலை பராசக்தி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (யூ/எ) கிடைத்துள்ளது என்று தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் சமூக வலைதளம் மூலம் தெரிவித்திருந்தார்.

மேலும், தணிக்கை குழுவினர் பரிந்துரையின்பேரில் பராசக்தி திரைப்படத்தில் 25 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, படத்தில் வரும் வாய்ஸ் ஓவர் (குரல் மூலம் கதை சொல்வது), மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் உயர்ந்தது என்று கூறுவது சற்று மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அறிஞர் அண்ணாவின் 'தீ பரவட்டும்' என்ற புகழ்பெற்ற வசனம் 'நீதி பரவட்டும்' என மாற்றப்பட்டுள்ளது.

'பட்டு நூலா' என்ற வார்த்தை இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை வெட்டி எடுக்கப்பட்டது. படத்தில் Bastard என்கிற ஆங்கில வார்த்தை நீக்கப்படவில்லை.

பராசக்தி திரைப்படம் 1960-ல் மதுரையில் நடைபெறுவது போல படமாக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை வட்டார வழக்கில் பேசப்படுகின்ற கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டிருக்கின்றன. முக்கியமாக 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வசனத்தை மாற்றி 'என் ஒரே கனவு இந்தி திணிப்புக்கு எதிரானது' என்று மாற்றப்பட்டுள்ளது. அதே போல் வடஇந்தியர்களின் மிக முக்கிய உணவான சப்பாத்தியை உவமைப்படுத்தி 'வர சப்பாத்தி' என்று வரும் வசனம் மியூட் செய்யப்பட்டு இருக்கிறது.

படத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்களையும் காட்சிப்படுத்துவதால் தெலுங்கு மொழியில் உள்ள கெட்ட வார்த்தைகளும் மியூட் செய்யப்பட்டுள்ளன. தபால் நிலைய காட்சி, துப்பாக்கி சுடும் காட்சி, இளம் தாயை கொல்லக்கூடிய காட்சி, இறந்தவர் உடல்களை காண்பிப்பது, தபால் அலுவலகங்களில் மணி ஆர்டர் அனுப்பும் காட்சி, யுபிஎஸ்சி தேர்வு முறை, ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு சில இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண் அடுப்பு, பானை - கோரிக்கைக்கு செவிசாய்க்க தமிழக அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள்

மேலும் காட்சியின் நீளம் குறைக்கப்பட்டு இருப்பதுடன், படத்தின் துவக்கத்திலேயே கொடுக்கக்கூடிய வாய்ஸ் ஓவர் (குரல் பதிவு முறையில்) தமிழில் விளக்கத்துடன் கூறப்பட்டிருக்கிறது.