ஏஐ தொழில்நுட்பத்தில் கோச்சடையான்| திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு கோச்சடையான் திரைப்படம் வெளியானது.

Published : August 4, 2026 at 12:42 PM IST
சென்னை: ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட ‘கோச்சடையான்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், கே.எஸ்.ரவிக்குமார் கதையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு கோச்சடையான் திரைப்படம் வெளியானது. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் திரைப்படமாக ‘கோச்சடையான்’ வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். கோச்சடையான் திரைப்படத்தை மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக, ஆட் பியூரோ அர்வர்டைசிங் நிறுவனத்திடம் ரூ.10 கோடியை மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் கடனாக பெற்றிருந்தது. இதையடுத்து, கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், ரூ.5 கோடிக்கான இரண்டு காசோலையை ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் வழங்கியது.
காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணம் வழங்குவதை நிறுத்தி வைக்க கூறி, மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வங்கிக்கு கடிதம் அனுப்பியிருந்ததால், காசோலைக்கு பணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநர் முரளி மனோகர் மீதும், ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்தின் உரிமையாளர் அபிர்சந்த் நஹர், காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கோச்சடையான் திரைப்படத்தின் உரிமையை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் வாங்கியது. இதையடுத்து, ‘கோச்சடையான்’ திரைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ‘கோச்சடையான்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்தின் உரிமையாளர் அபிர்சந்த் நஹர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் உரிமையை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் வாங்கியது மனுதாரருக்கு தெரிந்திருந்தும், அந்த நிறுவனத்திற்கு எதிராக எந்த கோரிக்கையையும் முன் வைக்காததால், ஏ.ஐ. தொழில்நுப்டத்தில் மேம்படுத்தப்பட்ட ‘கோச்சடையான்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை ஏற்க முடியாது என்றுக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

