அஜித்குமாரின் மிரட்டலான கார் ரேஸ் ஆவணப்படம்; ’கிளாடியட்டர்ஸ்’ டீசர் வெளியீடு
’கிளாடியட்டர்ஸ்’ ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்

Published : May 1, 2026 at 8:50 PM IST
சென்னை: அஜித்குமாரின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ’கிளாடியட்டர்ஸ்’ டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் அவரின் கார் ரேஸ் குறித்த ஆவணப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த ஆவணப்படத்திற்கு 'கிளாடியட்டர்ஸ்’ (gladiators) என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அஜித்குமார் திரை வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு கார் ரேஸ்களில் பங்கேற்று வந்த நிலையில், அதன் பிறகு காயம் ஏற்பட்டதால் சில காலம் கார் பந்தயத்தில் பங்கேற்காமல் இருந்தார். பின்னர் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் மீண்டும் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டினார். ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர், சர்வதேச கார் ரேஸில் தனது குழுவினரோடு கலந்து கொண்டு அசத்தி வருகிறார். அவரது குழுவில் ரால்ப் பாப்பெலார்ஸ், ஹூப் வான் ஐஜ்ந்தோவன், கேமரூன் மெக்லியாட், கிரிகோரி சர்வைஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐரோப்பா சீரிஸ் கார் ரேஸ், அதன் பின் இத்தாலி, அபுதாபி, பார்சிலோனா ஆகிய கார் பந்தயங்களில் பங்கேற்றார். அதன்பின் கடந்த ஆண்டு இறுதியில் ஆசிய லீ மென்ஸ் கார் ரேஸில் இந்தியாவின் ஃபார்முலா 1 கார் ரேஸில் நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து பங்கேற்று வெற்றி பெற்றார்.
தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் அஜித்குமார் அணி சமீபத்தில் லீ மேன் கப் தொடரில் பங்கேற்றது. பெல்ஜியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அஜித்குமார் அணி 2-வது இடம்பிடித்து அசத்தியுள்ளது.
Ajith Kumar Sports Services LLC presents
— Suresh Chandra (@SureshChandraa) May 1, 2026
GLADIATORS – In Pursuit of Challenges #Gladiators is a film on Ajith Kumar's Motorsport journey, Chasing the impossible. The race begins soon..https://t.co/27pwPuCPYA
Witnessed and Captured by #Vijay
Music by @gvprakash…
அஜித்குமார் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்தார். அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தனது 64வது படத்தில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதில் ஸ்ரீலீலா, மோகன்லாம் உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இன்று அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார், என்னை ஊக்கப்படுத்தி, இந்தியாவிற்கு பெருமைப்படுத்தி உள்ளீர்கள். உங்களை சந்தித்த நாள் முதல் உங்களுடன் பணிபுரிந்ததற்கு நன்றியுனர்வோடு இருப்பேன். மேலும் உங்களுடன் சிறப்பான நினைவுகளை உருவாக்க வெறியுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

