’தாய் கிழவி’ ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் - ராதிகா சரத்குமார் பேச்சு
சினிமாவில் நான் யாருக்கும் போட்டியாகவும், யாரையும் தாண்டிச் செல்லவும் வரவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Published : February 24, 2026 at 1:40 PM IST
சென்னை: ’தாய் கிழவி’ ரஜினிகாந்த் நடித்திருக்க வேண்டிய திரைப்படம் எனவும், அவர் நடிக்க மாட்டார் என்பதால் தான் நடித்துள்ளேன் எனவும் நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ’தாய் கிழவி’ திரைப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் வயதான பாட்டி வேடத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக சரத்குமார், சூரி ஆகியோருடன் படக்குழுவினர் ராதிகா சரத்குமார், இளவரசு, பால சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தியிடம் ரஜினிகாந்த் திரைப்பட அப்டேட் குறித்து தொகுப்பாளர் கேட்ட போது, ”ஏப்ரல் மாதம் 3-வது வாரத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது. இப்போது அதை மட்டும் தான் சொல்ல முடியும்” எனக் கூறினார்.
’தாய் கிழவி’ திரைப்பட இயக்குநர் சிவக்குமார் முருகேசன் பேசுகையில், “பசியோடு இருப்பவனுக்கும், வயிறார உணவு உண்டவனுக்கும் இருக்கக் கூடிய மயக்கம் ஒன்று தான். இருப்பினும் அதனுள் இருக்கக் கூடிய உணர்வுகள் வேறு. இந்தத் திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு, பல காரணங்களால் நிறுத்தப்பட்டது. பிறகு தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. அந்த வகையில் மீண்டும் எனக்கு ஒரு விதை நெல்லாக சேயோன் திரைப்படம் கிடைத்துள்ளது. நிச்சயமாக விளைச்சலை எடுத்துக் காட்டுவேன்” என பேசினார்.
நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், “இந்த படத்தில் நான் முதலில் நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அந்த தருணத்தில் என்னுடைய கணவர் சரத்குமார் இந்தப் படத்தின் கதையை தெரிந்து கொண்டதன் விளைவாக, அவரது வலியுறுத்தலால் நடித்தேன். இது ரஜினிகாந்த் நடித்திருக்க வேண்டிய திரைப்படம், அவர் இதில் நடிக்க மாட்டார் என்பதால் நான் நடித்துள்ளேன். அந்த அளவிற்கு மாஸாக எடுக்கப்பட்டுள்ளது.
படத்தைப் பார்த்த பின் கமல்ஹாசன் என்னிடம், இந்த படத்தை எப்படியாவது இயக்குநர் பாரதிராஜாவை பார்க்க வைத்து விடு, அப்படி அவர் பார்த்து விட்டார் என்றால், நிச்சயம் மகிழ்ச்சி அடைவார் எனக் தெரிவித்தார். மேலும் இயக்குநர் பாரதிராஜாவின் தாயாரும் இந்தப் படத்தில் வரக் கூடிய ’தாய் கிழவி’ போலத் தான் இருப்பார், அவரது பெயர் தான் கருத்தம்மா. இந்த தாய் கிழவி திரைப்படத்தில் நடித்ததற்காக எனக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என பலரும் தெரிவித்தனர். அது கிடைத்தால் சந்தோஷம், கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை” என்றார்.
நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசுகையில், “எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனம் என்னுடைய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பது தான் நோக்கம்.
’தாய் கிழவி’ திரைப்படத்தின் கதையை ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் தான் கொண்டு வந்தார். அந்த கதையை கேட்டு முடித்தவுடன் இயக்குநர் சிவகுமார் முருகேசனுடன் இரு படங்களில் பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். அதில் இரண்டாவது படத்தில், நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றும் முன்பே முடிவு செய்து விட்டேன். அவர் கதை சொன்ன விதமும், கதை மட்டுமில்லை, அவருடைய உண்மைத் தன்மை தான் காரணம்.
இந்தத் திரைப்படத்தில் ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகாவை தவிர இந்தியாவில் வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது. திரைப்படங்களில் நடிப்பதை விட இது போன்ற படங்களை தயாரிப்பதில் தான் எனக்கு ஆத்ம திருப்தி உள்ளது. அதற்காகவே இது போன்ற படங்களை தயாரிக்கிறேன். அதே போல் சினிமாவில் யாருக்கும் நான் போட்டியாக வரவில்லை. யாரையும் தாண்டிச் செல்லவும் வரவில்லை, என்னை இப்படியே விட்டு விடுங்கள். இது போன்ற படங்களை தயாரித்துக் கொண்டு, பலருடன் பணியாற்றிக் கொண்டு செல்கிறேன்” என கூறினார்.

