பெண்கள் மட்டுமல்ல, ’தாய் கிழவி’ படத்தை குடும்பங்களும் கொண்டாடும் - நடிகை ராதிகா சரத்குமார்
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், அருள்தாஸ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Published : February 28, 2026 at 6:54 PM IST
தூத்துக்குடி: பெண்களுக்கு மட்டுமல்ல, ’தாய் கிழவி’ திரைப்படம் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான படம் என நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், அருள்தாஸ், இளவரசு, பால சரவணன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள தாய் கிழவி படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (பிப்.27) திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள பெரிசன் திரையரங்கில் ’தாய் கிழவி’ படக்குழுவினர் நடிகை ராதிகா சரத்குமார், இயக்குநர் சிவகுமார், முருகேசன் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”நல்ல கதையம்சம் உள்ள படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஒரு பெருமையான விஷயமாக உள்ளது. இது போன்ற ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநரின் எழுத்திற்கு ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுத்துள்ளார்.
பெண்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இப்படம் ஒரு அழகான மெசேஜ். அதற்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள். திரையரங்குகளில் நல்ல வரவேற்பு உள்ளது. சென்னையை விட இங்கு அதிக அளவு மக்களிடம் வரவேற்பு உள்ளது. மேலும் தற்போது வெளிநாட்டிலும் படம் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது மகிழ்ச்சி. பல நாளைக்கு பின்பு ஒரு நல்ல படத்தில் நடித்துள்ளது சந்தோஷமாக உள்ளது. இயக்குநர் என்னை நன்றாக வேலை வாங்கி விட்டார், படத்தில் மண் சார்ந்த மொழி பேசுவதற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
| இதையும் படிங்க: நடிகர் அஜித்தை வைத்து படம் தயாரிக்கிறேனா? சிவகார்த்திகேயன் பதில் |
இன்னும் நிறைய படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறேன். நடிகர் சூர்யாவுடன் ஒரு படம் நடிக்கிறேன். நானும், எனது கணவர் சரத்குமாரும் நடித்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுமே வெவ்வேறு விதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. புது இயக்குநர்களிடம் நிறைய நடித்துள்ளேன். இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்த கதையை வைத்துக் கொண்டு என்னிடம் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். எனது கணவரும் இப்படத்தில் நடிக்க வேண்டும் என கூறினார். பின்னர் கதையை கேட்ட பின்பு தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார்.

