'சினிமாவை விட்டு விலகிவிட்டேன், 4 குழந்தைகள் உள்ளனர்': பதற வைத்த த்ரிஷாவின் பதிவு
சினிமாவை விட்டு த்ரிஷா விலகவுள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டா பதிவு மூலம் நடிகை த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார்.

Published : April 7, 2026 at 2:51 PM IST
சென்னை: தான் சினிமாவை விட்டு விலகிவிட்டதாகவும், தனக்கு 4 குழந்தைகள் உள்ளதாகவும் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். தான் சினிமாவை விட்டு விலகப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில், த்ரிஷா இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. ஏராளமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த த்ரிஷா, கடைசியாக 'தக் லைஃப்' படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக நடிகை த்ரிஷாவை சுற்றி பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், அவர் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தது. இதனிடையே, நடிகர் பார்த்திபன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா குறித்து பேசியதும் சர்ச்சையானது. இதற்கு அப்போதே எதிர்ப்பை பதிவிட்டு வந்தார் த்ரிஷா.
இதனைத்தொடர்ந்து, த்ரிஷா சினிமாவை விட்டு விலகவுள்ளதாக சில நாட்களாகவே வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதனால்தான் இப்போதுவரை எந்த புதுப்படத்தையும் அவர் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் கசிய, அவரது ரசிகர்கள் சோகம் அடைந்தனர். இந்நிலையில், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷா சூசகமாகவும், காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.

| இதையும் படிங்க : வசூலில் சாதனை படைத்த 'துரந்தர் 2'- கொண்டாடும் ரசிகர்கள் |
அதில், "நான் சினிமாவை விட்டு விலகி விட்டேன், ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேன். நான்கு குழந்தைகளை வளர்க்கிறேன், அவர்களுக்கு நேற்றுதான் இரண்டு வயது ஆனதாம்! இன்னும் ஏதாவது சேர்க்கணுமா, இல்லை, இன்றைய கற்பனைக் கதைகள் முடிந்ததா?” என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் அவரை சுற்றி வலம் வரும் தகவல்கள் வெறும் வதந்தி என அவர் உறுதி செய்துள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

