எவன் என்ன சொன்னாலும் இது அண்ணன் - தம்பி பொங்கல்தான் - சிவகார்த்திகேயன்
33 வருடங்கள் நம் அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியவரை நாம் கொண்டாட வேண்டும்; எனவே, ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை கொண்டாடுங்க என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Published : January 4, 2026 at 10:21 AM IST
சென்னை: "எவன் என்ன சொன்னாலும் இந்த பொங்கல் அண்ணன் - தம்பி பொங்கல்தான் என பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மைய கருவாகக் கொண்டு, டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. நடிகர் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலிலா என நடிகர் பட்டாளம் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பராசக்தி படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஜனநாயகன் vs பராசக்தி
பின்னர் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “முதலில் பராசக்தி படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால், அப்போது விஜய் அண்ணாவின் படம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்தது. அதனால், பராசக்தியை பொங்கலுக்கு வெளியிடலாம் என தயாரிப்பாளரிடம் பேசி திட்டமிட்டோம். ஆனால், ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலுக்கு வெளியாவதாக தகவல் வந்தது.
நான் உடனே தயாரிப்பாளர் ஆகாஷை தொடர்பு கொண்டு, ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வருவதாக தெரிவித்தேன். ஆனால், பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்ததாலும், மேலும் படத்தை தாமதப்படுத்தினால் தேர்தல் நேரம் என்பதாலும் திட்டமிட்ட தேதியில் வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார். அதனால், நானும் பொங்கல் வெளியீட்டிற்கு சம்மதம் தெரிவித்தேன்.
விஜய் சாரின் கடைசி படம்
பின்னர், நான் இதுகுறித்து விஜய் சார் மேனேஜர் ஜெகதீஷை தொடர்பு கொண்டு ஜனநாயகன் மற்றும் பராசக்தி பொங்கலுக்கு வருகிறதே என கேட்டேன். அதற்கு அவர், பொங்கலுக்கு இரண்டு படங்களும் வரலாம் என்று சொன்னார். "இரண்டு படம் வருவது பிரச்சனை இல்லை, விஜய் சாரின் கடைசி படம் என்பதால் அவரிடம் கேளுங்கள். இல்லையென்றல் நடுவில் யாராவது காமெடி செய்வார்கள்" என நான் கூறினேன். அதன்படி, அவர் விஜய் சாரிடம் பேசிவிட்டு என்னை தொடர்புகொண்டு, "ஒரு பிரச்சனையும் இல்லை, நாம சூப்பரா பண்றோம். விஜய் சார் உங்களுக்கு வாழ்த்துகள் சொல்ல சொன்னார்" என தெரிவித்தார்.
ஜனநாயகன் படத்தை கொண்டாடுங்க
33 வருடங்கள் நம் அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியவரை நாம் கொண்டாட வேண்டும். ஆகவே, வருகிற ஜனவரி 9ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தை கொண்டாடுங்க. அதற்கு மறுநாள் ஜனவரி 10ஆம் தேதி பராசக்தியை கொண்டாடுங்க. எவன் என்ன வேணாலும் சொல்லட்டும். இந்த பொங்கல் அண்ணன் - தம்பி பொங்கல்தான்’ என்றார். இதை கேட்டதும் ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்பரித்தது.
முன்னதாக, பராசக்தி படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “1960-க்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் பராசக்தி. இப்படத்தில் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும், மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம்” என தெரிவித்தார். முன்னதாக நடிகர் அதர்வா, ரவி மோகன், இயக்குனர் மணிரத்தினம் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

