’ரசிகர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்’ - மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்
சினிமாவை விட்டு விலகுகிறேன் என்ற போது, ‘நீ எதை வேணாலும் சொல். ஆனால், சினிமாவில் மட்டும் இருக்க மாட்டேன் என சொல்லக் கூடாது என ரசிகர்களும், சினிமா துறையினரும் தெரிவித்ததாக ரவி மோகன் கூறியுள்ளார்.

Published : July 8, 2026 at 12:41 PM IST
சென்னை: எனது ரசிகர்களுக்கு ஒரு போதும் நான் துரோகம் செய்ய மாட்டேன் என நடிகர் ரவி மோகன் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், மேடையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். அவர் பேசுவதற்கு முன்பாக நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சினிமாவில் நுழைந்து 23 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய ரவி மோகன், "நான் தற்போது நன்றாக இருக்கிறேன். எனக்கு இப்போது 46 வயது ஆகிறது. அதில் 23 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன்.
எனது வாழ்வில் 23 வருடங்கள் சினிமாவிற்காக அர்ப்பணித்துள்ளேன். இந்த சூழ்நிலையில், எனது சிறிய தவறுகள் உங்களை காயப்படுத்தி இருக்கலாம். எனது தனிப்பட்ட வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் சரி பாதி இருக்கும் போது, நான் தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன். அதன் பிறகு நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் என்ற போது, ‘நீ எதை வேணாலும் சொல். ஆனால், சினிமாவில் மட்டும் இருக்க மாட்டேன் என சொல்லக் கூடாது’ என்றார்கள்.
ரசிகர்கள் அன்புடன் கூறியதை வேத வாக்காக எடுத்து கொண்டு, மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சினிமாவிற்கும், எனது ரசிகர்களுக்கும் நான் என்றும் துரோகம் செய்யமாட்டேன். கண்டிப்பாக திரும்ப வருவேன், உங்களது சந்தோஷாக, துருவனாக, தனி ஒருவனாக, பொன்னியின் செல்வனாக, கராத்தே பாபுவாக மீண்டு வருவேன்.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், மனநலம் பற்றி நிறைய பேர் பேசத் தொடங்கினர். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. நான் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் எனது ரசிகர்கள் மட்டும் தான்” என கூறினார்.
| இதையும் படிங்க: தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் - ஒரே படத்தில் 6 இயக்குநர்கள் அறிமுகம் |
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரவி மோகன், நான் விவாகரத்து பெறும் வரை எனது நடிப்பில் படங்கள் வெளியகாது என தெரிவித்தார். இது சினிமா வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணேஷ் பாபு இயக்கத்தில், ரவி மோகன் கதாநாயகனாக நடித்துள்ள ’கராத்தே பாபு’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

