தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு; ரஜினிகாந்த் முக்கிய கோரிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, இன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.

Published : February 22, 2026 at 3:08 PM IST
சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெறும் அணியினர், பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்தார்.
நடிகர் சங்கத் தேர்தலைப் போல தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், தற்போதைய பொறுப்பாளர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக 2026- 29ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் இன்று காலை 8 மணி முதல் சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வருகிறது.
மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நிறைவுபெறும். தொடர்ந்து 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை முதலே சங்க உறுப்பினர்களான நடிகர்கள் ஆர்யா, நாசர், மன்சூர் அலிகான், பிரகாஷ்ராஜ், ரஞ்சித், இயக்குநர்கள் பாண்டிய ராஜன், சுந்தர் சி, சமுத்திரக்கனி; தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மு.க.தமிழரசு, ராஜன்; இயக்குநர் டி.ராஜேந்திரன், நடிகைகள் குஷ்பூ, தேவயானி, சுஹாசினி மற்றும் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். இதில் மொத்தம் 1524 பேர் ஓட்டுரிமை பெற்றுள்ள நிலையில், ஒரு மணி நிலவரப்படி, 630 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
வாக்களித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, “தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, வெற்றி பெறும் அணி தயாரிப்பாளர்களுக்கான முக்கியமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். சரி செய்வார்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.
| இதையும் படிங்க: ஓபிஎஸ்-ஸை நினைத்தால் பாவமாக உள்ளது - பாஜக நிர்வாகி குஷ்பூ |
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் டி.ராஜேந்திரன், “தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டேன். நம்பரை பார்த்து ஓட்டுப் போடுபவன் நான் இல்லை. நண்பரை பார்த்து தான் ஓட்டுப் போடுவேன்” என்றார்.
அதன்பின்னர் பேசிய தயாரிப்பாளர் அருண்பாண்டியன், “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மிக முக்கியமான சங்கம். நிச்சயமாக ஒரு பலம் வேண்டுமென ஆரம்பத்திலிருந்து நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு மாதிரி எல்லாம் அமைதியாக இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருந்தால், கண்டிப்பாக தமிழ்த் திரைப்படம் மிக மிக உறுதியாக இருக்கும். அண்டை மாநிலத்தில் தயாரிப்பாளர் சங்கங்கள் மிக ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த சங்கம் இனிமேலும் நன்றாக இருக்கும்” என நம்புகிறேன்.

