'துபாயில் இயல்பு நிலை திரும்பியதும்...' அஜித் குறித்து மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல்
துபாயில் தங்கியுள்ள நடிகர் அஜித்குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

Published : March 1, 2026 at 7:54 PM IST
சென்னை: துபாயில் இயல்பு நிலை திரும்பியதும் நடிகர் அஜித்குமார் சென்னைக்கு வருவார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஆர்திக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே திரைப்படங்களில் இருந்து கடந்த ஓராண்டாக விலகி இருந்த அஜித்குமார் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் கார் பந்தயப் போட்டிகளில் அவரது குழுவினரோடு பங்கேற்று பரிசுகளையும் பெற்று வந்தார். தற்போது, 24 ஹெச் சீரிஸ் மத்திய கிழக்கு டிராபி'க்கான பந்தயத்தில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
துபாயில் தொடர்ச்சியாக கார் பந்தயத்தில் கலந்து கொண்டிருந்த நடிகர் அஜித்தை தமிழ் திரை பிரபலங்களான சிலம்பரசன், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சிபிராஜ் ஜிவி பிரகாஷ் குமார், மாதவன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற கார் பந்தயப் போட்டியில் பங்கேற்ற அஜித்குமாரின் அணி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. காரினை ஓட்டி சென்ற அஜித் அணியின் வீரர் அயர்டன் சாதுரியமாக காரினை நிறுத்திவிட்டு தப்பினார். பின்னர் தீயணைப்பு உபகரணங்களை வைத்து காரில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர். இது போல தொடர்ச்சியாக பல விபத்துகளை அஜித் அணியினர் சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில், ஈரானை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க, ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட பல இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதனால் துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள முக்கிய அரசு கட்டடங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துபாயில் தங்கியுள்ள நடிகர் அஜித்குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துபாயில் உள்ள அஜித்குமார் பாதுகாப்பாக இருப்பதாகவும், துபாய் இயல்பு நிலைக்கு வந்த பிறகு அவர் சென்னை வர திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| இதையும் படிங்க: பெண்கள் மட்டுமல்ல, ’தாய் கிழவி’ படத்தை குடும்பங்களும் கொண்டாடும் - நடிகை ராதிகா சரத்குமார் |

