தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியாதது அவமானம் - நடிகர் ஆரி ஆதங்கம்
அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், மற்ற படங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் நடிகர் ஆரி கூறியுள்ளார்.

Published : March 2, 2026 at 10:46 AM IST
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானம் என நடிகர் ஆரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் 'போர்த் ப்ளோர்' (fourth floor) திரைப்படம் பிப்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை தனது சொந்த ஊரான பழநியில் பார்த்த நடிகர் ஆரி, தண்டாயுதபாணி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நடிகர் மட்டுமல்ல, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல; இது போன்று பலருக்கும் நடக்கிறது.
சமூக வலைதள வளர்ச்சி தனிமனித விமர்சனத்தை அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது. விவாகரத்து என்பது இருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் கருத்து சொல்வது அநாகரிகமானது. அரசியலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் சரி. தனிமனித தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
பெண்களை குறித்து பேசும் அதே வேளையில், ஆண்களை பற்றி பேசுவதில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் பெண்களுக்கான பிரச்சினையில் ஆண்கள் குரல் கொடுக்க வேண்டும். விமர்சனங்கள் வரவேற்க கூடியதுதான். தனிமனித தாக்குதல் வன்முறையாக இருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு இது அதிகளவில் நடக்கிறது. முன்பு, திரைப்படங்களில் எப்போதும் பாலியல் வன்கொடுமை சார்ந்த காட்சிகள் இடம்பெறும். இப்போது அவை படங்களில் இல்லை. அதை விமர்சனம் என்ற பெயரில் செய்ய தொடங்கிவிட்டனர்” என்றார்.
சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காதது குறித்து பேசிய ஆரி, “மால்களில் சிறிய படங்களுக்கு திரையரங்குகள் வழங்கப்படுவதில்லை. எங்கள் ’போர்த் ப்ளோர்’ படத்திற்கு தற்போது இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் தயாரிக்கும் படங்களை திரையிட முடிவதில்லை. கேட்டால், விளம்பரம் போதவில்லை என்கின்றனர். படம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை திரையரங்க உரிமையாளர்கள் தான் முடிவு செய்கின்றனர். எங்கள் படத் தயாரிப்பாளர் கண் கலங்காத குறையாக பேசுகிறார்.
அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்ற படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. தயாரிப்பு செலவை விட விளம்பர செலவு அதிகரித்துள்ளது. புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களிடம் இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். இதனாலேயே புதிய தயாரிப்பாளர்கள் வர தயங்குகின்றனர். நல்ல கதைகள் இல்லை என்கின்றனர். நல்ல கதையோடு படம் எடுத்தால் திரையரங்கம் தருவதில்லை.
தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானம். விளம்பரத்திற்கென இவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டுமென நிர்ணயிக்க வேண்டும். ஏன் சிறிய திரைப்படங்களை வெளியிடவில்லை என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட்டால், நல்ல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வருவார்கள்” என்றார். ’ஜனநாயகன்’ ரிலீஸ் குறித்து கேட்டதற்கு, “ஜனநாயகன் படம் சென்சார் விவகாரம் குறித்து முழுமையாக விவரம் தெரியாமல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. 2026 தேர்தலில் மக்களுக்கு எவர் சரி என தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களுக்கான நல்ல ஆட்சி கொடுப்பவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர்” என்றார்.

