நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த அமீர்கான்; திரையுலகினர் வாழ்த்து
நடிகர் அமீர்கான்- கவுரி ஸ்ப்ராட் ஜோடி திருமண விழாவில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் சென்று வாழ்த்தினார்.

Published : July 5, 2026 at 6:35 PM IST
மும்பை: பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான அமீர்கான் தனது நீண்ட நாள் காதலியான கவுரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்துக் கொண்டார்.
பாலிவுட் பிரபலம் நடிகர் அமீர்கான் தனது நீண்ட நாள் காதலியான கவுரி ஸ்ப்ராட்டை (Gauri Spratt) இன்று (ஜூலை 05) திருமணம் செய்துக் கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, பந்த்ரா பகுதியில் உள்ள பாலி ஹில் இல்லத்தில் எளிமையான முறையில் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கவுரி ஸ்ப்ராட்டை அமீர்கான் கரம் பிடித்தார்.
விழாவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 'லகான்' திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், நடிகர் வீர் தாஸ், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அமீர்கான் திருமணம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், நடிகர் அமீர்கான் தனது மகன்கள் முன்னிலையிலும், கவுரி ஸ்ப்ராட் தனது மகன் முன்னிலையிலும் திருமண பதிவேட்டில் கையெழுத்திட்டனர். அந்த புகைப்படத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இருந்தனர்.
அமீர்கானின் மூன்றாவது திருமணம் இது:
இந்த திருமணம் நடிகர் அமீர்கானின் மூன்றாவது திருமணமாகும். இவர் இதற்கு முன் 1986 முதல் 2002 வரை திரைப்படத் தயாரிப்பாளர் ரீனா தத்தாவை மணந்திருந்தார்; இவர்களுக்கு ஜுனைத் மற்றும் இராகான் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். பின்னர் 2005- ல் திரைப்படத் தயாரிப்பாளர் கிரண் ராவை அமீர் மணந்தார். 2021-ல் பிரிந்த இத்தம்பதியினர், தங்கள் மகன் ஆசாத்தை இணைந்து வளர்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஊடகங்களுக்கு கவுரி ஸ்ப்ராட்டை அறிமுகப்படுத்திய நடிகர் அமீர்கான், திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவித்திருந்தார்.
யார் இந்த கவுரி ஸ்ப்ராட்?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் கவுரி ஸ்ப்ராட். பேஷன் டிசைனிங் படிப்பை முடித்துள்ள இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார், மும்பையில் சலூன் கடையை நடத்தி வருகிறார்.
தற்போது அமீர்கானுக்கு 61 வயது ஆகும் நிலையில், 47 வயதான கவுரி ஸ்ப்ராட்டை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொட்டித்தீர்த்த கனமழை:
மும்பையில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் திட்டமிட்டபடி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று எளிமையான முறையில் நடிகர் அமீர்கானின் திருமணம் நடைபெற்றுள்ளது. அமீர்கானின் இல்லத்திற்கு அருகே உள்ள சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து கிடந்ததால் திருமணத்திற்கு பங்கேற்க வந்தவர்கள் சிரமம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதுமே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கொட்டித்தீர்க்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

