ETV Bharat / education-and-career
டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை - டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கு அறிவிப்பு வெளியீடு
டிப்ளமோ / ஐடிஐ படித்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்விற்கு ஜூலை 17 முதல் விண்ணப்பிக்கலாம்.

Published : July 8, 2026 at 12:18 PM IST
சென்னை: 839 காலிப்பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் ஒவ்வொரு வருடமும் குரூப் தேர்வுகள், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு என்பது நேர்காணல் உள்ள பதவிகள், நேர்காணல் அல்லாத பதவிகள் மற்றும் டிப்ளமோ/ ஐடிஐ என மூன்று வகையில் நடத்தப்படும்.
அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு 56 பதவிகள் கொண்டு 839 காலிப்பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி-யின் ஆண்டு அட்டவணையில் குறிப்பிட்டப்படி, ஜூலை 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 17 முதல் பெறப்படுகிறது.
சுரங்க முதலாள், மீன்வள சார் ஆய்வாளர், உதவி மேலாளர், வானொலி மேற்பார்வையாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், இளநிலை பயிற்சி அலுவலர், சாலை ஆய்வாளர், உதவி மேலாண்மை அலுவலர் உள்ளிட்ட பதவிகள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஜூலை 1-ஆம் தேதியின்படி கணக்கிடப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, எம்பிசி ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. இதர பிரிவினருக்கு பதவிக்கு ஏற்ப அதிகபடியாக 37 வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கொள்முதல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர் பதவிக்கு மட்டும் அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இப்பணியிடங்களுக்கு பதவிக்கு ஏற்ப அந்தந்த தொழிற்பிரிவில் டிப்ளமோ / ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை
இப்பணியிடங்களுக்கு 2 தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும். முதல் தாள் கட்டாய தமிழ், பொது அறிவு, நுண்ணறிவு ஆகியவற்றுடன் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் தாள் அந்தந்த முதன்மை பாடத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி-யின் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியும் விரும்பமும் உள்ளவர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆகஸ்ட் 19 முதல் 21 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

