ETV Bharat / education-and-career
TNEA 2026: பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

Published : May 3, 2026 at 8:41 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று (மே 3) முதல் தொடங்கியது. மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள பிஇ, பிடெக், பி.ஆர்க் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று (மே 3) முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.
மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஜூன் 6 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 5-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பம் செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 8-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சரிபார்க்கப்படும்.
மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தரவரிசை பட்டியலில் ஏதாவது மாற்றம் இருந்தாலோ, ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதிக்குள் குறைகளை தெரிவித்தாலோ அவை சரி செய்து தரப்படும் எனவும் தமிழ்நாடு தொழில்நுட்ப மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் அறிவித்துள்ளார்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் உள்ளிட்டவை அந்த இணையதளத்தில் இடம்பெற்று இருக்கும்.
கட்டணம்
விண்ணப்பக் கட்டணமாக ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவு மாணவர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவு மாணவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.
சந்தேகங்களுக்கு அழைக்கவும்
இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1800-425-0110 என்ற எண்ணிலும், theacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
முக்கிய நாட்கள்
| விவரம் | தேதிகள் |
| விண்ணப்பப்பதிவு தொடக்கம் | 03.05.2026 |
| விண்ணப்பப்பதிவு நிறைவு | 02.06.2026 |
| சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் | 06.06.2026 |
| சான்றிதழ் சரிபார்ப்பு | 08.06.2026 - 20.06.2026 |
| தரவரிசை பட்டியல் | 29.06.2026 |
| குறைத்தீர்வு | 30.06.2026 - 04.07.2026 |
சென்ற வருடம் கலந்தாய்வில் 443 கல்லூரிகள் பங்கேற்றன. மொத்தம் 2,54,585 இடங்களில் 2,20,841 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். இது, 2024 ஆண்டை விட 23.67 சதவீதம் அதிகமாகும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசை வெளியான பின்னர், கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும். கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளில், படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.

